புதுடெல்லி: டெல்லி ஜவர்கலால் நேரு பல்கலைக் கழகத்தில் விடுதி கட்டணம் 300 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டது. அதோடு, ஆடைக்கட்டுப் பாடு, நேரக்கட்டுபாடு உள்பட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு மாணவர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த இரண்டு வாரமாக இந்த புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன் ஜே.என்.யூ மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து மூன்று மடங்காக உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு பகுதியளவு திரும்பப் பெறப்பட்டது. ஆனாலும் உயர்த்தப்பட்ட முழு கட்டணத்தையும் நீக்க வேண்டும் என மாணவர்கள் போராடி வருகின்றனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். இதனால் நாடாளுமன்றம் சுற்றி உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதனையும் மீறி மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். அவர்களை டெல்லியில் உள்ள பேர் சாராய் (Ber sarai) பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் வெடித்தது. இதனால் டெல்லி போலீசார் பேரணி சென்ற மாணவர்கள் மீது வெறித்தனமாக தடியடி நடத்தினார்கள். அதில் பல மாணவர்களுக்கு மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#WATCH Delhi: Clash between Jawaharlal Nehru University (JNU) students and police, earlier today. Delhi Police PRO has said that they will inquire into lathi charge allegations made by JNU students. pic.twitter.com/5yOhuDBvdi
— ANI (@ANI) November 18, 2019
இந்த தடியடி தாக்குதல் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் மிகவும் வைரலானது. இதற்கு அனைத்து தரப்பிலும் இருந்து கண்டனம் எழுந்து வருகிறது. டெல்லி போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, மாணவர்கள் மீது நடத்திய தடியடி குறித்து விசாரிப்பதாக டெல்லி போலீஸ் PRO தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 14 ஆம் தேதி டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (Jawaharlal Nehru University) வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் (Swami Vivekananda) சிலையை சில சமூக விரோத சக்திகள் சேதப்படுத்தினர். சிலை மீது சிலர் செங்கல் மற்றும் கற்களை வீசினர் உள்ளனர். மேலும் சிலை மீது அநாகரீகமான செய்திகளையும் எழுதியுள்ளனர். இதன் பின்னர் சிலை துணியால் மூடப்பட்டு, இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.