குஜராத் மாநிலத்தில் பெண் ஊழியர்களை நிர்வாணமாக நிறுத்தி மருத்துவ பரிசோதனை செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பூஜ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் மாதவிலக்கு நாட்களில் உணவு விடுதி உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. அங்கு கல்லூரி விடுதியில் சில தினங்களுக்கு முன் மாணவிகள் மாதவிலக்கு ஆகவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவர்களது உடைகளை கழற்றி காண்பிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இந்த சர்ச்சை மறைவதற்குள் குஜராத்தில் இதுபோன்று மற்றொரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூரத் மாநகராட்சியின் பயிற்சி பெண் ஊழியர்கள் 10 பேருக்கு மாநகராட்சி மருத்துவ கல்லூரியில் உள்ள மகளிர் வார்டில் நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது. அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து பரிசோதனை செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஊழியர் சங்கம் புகார் செய்தது. மேலும் அதில், திருமணம் ஆகாத பயிற்சி பெண் ஊழியர்களையும் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என பெண் மருத்துவர்களை கொண்டு பரிசோதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.