சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. டிசம்பர் 26-ம் தேதியுடன் நிறைவு பெற்ற மண்டல பூஜை மற்றும் வழிபாடுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் அன்று இரவு 11 மணியளவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று 14-ம் தேதி பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறவுள்ளது.
இன்று மதியம், 1:47- மணிக்கு, ஐயப்பனுக்கு மகர சங்கரம பூஜை செய்யப்படும். இதில், திருவிதாங்கூர் மன்னர்களின் அரண்மனையான, கவடியாரில் இருந்து, ஐயப்பனுக்கான அபிஷேக நெய் கொண்டு வரப்படும். நெய் தேங்காய் உடைக்கப்பட்டு, பாத்திரத்தில் ஊற்றாமல், நேரடியாக அபிஷேகம் செய்யப்படும்.
இரு நாட்களாக, இங்கு வந்த பக்தர்களில் பெரும்பாலானோர், ஜோதி தரிசனத்துக்காக, சன்னிதானத்தை சுற்றியுள்ள காடுகளில், கூடாரம் அமைத்து தங்கி உள்ளனர்.