திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 2 ஆயிரத்து 668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அரோகரா முழக்கத்துடன் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Dec 10, 2019, 08:47 PM IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Pic Courtesy : www.thiruvannamalai.in

புது டெல்லி: இன்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகா கார்த்திகை தீபம் உச்சியில் ஏற்றப்பட்டது. தீபம் ஏற்றப்பட்டதும் பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். இந்த மகா தீபம் இன்றிலிருந்து அடுத்த 10 நாட்களுக்கு தொடர்ந்து எரியும். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்கதர்கள் கலந்துக் கொண்டனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்படி இன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை தீபத்தை பார்க்க சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்புக்காக கிரிவாலா சாலையில் 275 சிசிடிவி கேமராக்களை போலீசார் நிறுவியுள்ளனர்.

பாதுகாப்பு காரணமாக திருவண்ணாமலை முழுவதும் 8 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னி பிளம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாதீபம் ஏற்றப்பட்டதும் 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் இருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை நோக்கி மகா தீபத்தை வணங்கினார்கள். காலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தீபம் ஏற்றுவதற்காக பக்தர்கள் மற்றும் ஆவின் நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் அடுத்தடுத்து மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டன. மகா தீபத்தை காண 2,500 பேர் மலை மீது ஏறிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றும் பொருட்களை மலைமீது எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத்திருவிழாவை யொட்டி 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்ய உள்ளதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிரிவலப் பாதையை சுற்றிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து கிரிவலப் பாதை வரை மினிபேருந்துகள் மூலம் பக்தர்களை அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.