அறிமுக இயக்குநர் கே.ராஜா முகமது இயக்கத்தில், ஸ்ரீ ஆண்டால் மூவிஸ் சார்பில் பி.வீர அமிர்தராஜ் தயாரித்திருக்கும் படம் ‘முனியாண்டியின் முனி பாய்ச்சல்’. இதில் நாயகனாக அறிமுக நடிகர் ஜெயகாந்த் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகன் ஜெயகாந்த், “அனைவருக்கும் வணக்கம். இப்படம் உருவாக முதற்காரணம் பாண்டி கோவில் தான். நான் எல்லா முடிவுகளையும் பாண்டி கோவிலில் வைத்து தான் எடுப்பேன். அமாவாசை, பெளர்ணமி நாட்களில் நான் எப்போதும் பாண்டி கோவிலில் தான் இருப்பேன். என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று ராஜா முகம்மது வரும் போது, தயாரிப்பாளர் யார் என்று தெரிந்து கொள்ள பாண்டி கோவிலில் அழுது வேண்டினோம்” என்றார்.
மேலும் படிக்க | தர்ஷன் நடித்துள்ள நாடு படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
படத்தின் இயக்குநர் ராஜா முகமது பேசுகையில், “அளவற்ற அருளாளன் இறைவனின் திருப்பெயரால் இந்த உரையை துவங்குகிறேன். எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜ் மற்றும் அவரின் மனைவி திலகவதி இல்லை என்றால் இந்த திரைப்படம் கிடையாது. மதுரையில் என் நண்பன் ஜெயகாந்த் உடன் பாண்டி கோவிலில் அமர்ந்து அந்த காவல் தெய்வத்தின் கதைகளையும் அங்கு நடந்த அதிசய நிகழ்வுகளைப் பற்றியும் பேசும் போது, இந்த தெய்வத்தின் கதையை ஏன் நாம் திரைப்படத்தில் கொண்டு வரக்கூடாது. இதைப் பற்றி யாருமே பேசியதில்லையே என்ற எண்ணம் தோன்றியது. எனக்குத் தெரிந்து வருடத்தின் 365 நாட்களும் கடா வெட்டி பூஜை நடக்கின்ற கோவில் முனியாண்டி கோவிலாகத்தான் இருக்கும். சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. ஆனால் நான் நேரில் பார்த்து இருக்கிறேன். அந்த கோவிலின் பூசாரி அருள் வாக்கு சொல்லும் போது அவரின் குரல் மாறிப் போய், வேறொரு நபராகவே என் கண்களுக்குத் தெரிவார். நாங்கள் படம் தொடர்பான எல்லா வேலைகளுக்கும் பாண்டி கோவிலில் முதலில் உத்தரவு கேட்போம். என் நண்பனின் கண்களில் மூன்று தயாரிப்பாளரைக் காட்டியது.
அதில் முதலாமானவர் தான் எங்கள் தயாரிப்பாளர் வீர அமிர்தராஜ். எங்கள் தயாரிப்பாளருக்கு குல தெய்வம் முனியாண்டி தான். அவர்கள் இப்படத்தை தயாரிப்பதற்கு மிக முக்கிய காரணமும் அதுதான். தயாரிப்பாளர் இப்படத்தைப் பணத்துக்காக தயாரிக்கவில்லை என்றாலும் அவருக்கு இப்படம் நல்ல லாபத்தையும் கொடுக்க வேண்டும். நாயகனாக ஜெயகாந்திற்கும், இயக்குநரான எனக்கும் நல்ல எதிர்காலத்தைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுகிறோம். அது அப்படியே நடக்கும் என்றும் நம்புகிறோம்.” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “அண்ணன் ஆர்.வி உதயகுமார் என்னை பக்திமான் என்று சொல்லிவிட்டு அவர் தான் பக்தியைப் பற்றி அதிகமாக பேசி இருக்கிறார். இப்படத்தின் சிறப்பு ”முனியாண்டியின் முனி பாய்ச்சல் இயக்கம் ராஜா முகம்மது”. இதுதான் சிறப்பு, இது சினிமாவில் மட்டுமே சாத்தியம். சினிமாவில் மதம் சாதி கிடையாது. ஜெயகாந்த் ராஜா முகம்மது கூட்டணியை பார்க்கும் போது எனக்கு விஜயகாந்த், இப்ராஹிம் ராவுத்தர் கூட்டணி ஞாபகம் வருகிறது. ராவுத்தர் விஜயகாந்த் வளர்ச்சியில் மிக முக்கியமானவர், தன் நண்பனின் வெற்றிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். அவர்களுக்கு இடையில் மதம் இல்லை. நட்பு மட்டுமே இருந்த்து. குலதெய்வத்தின் பெயர் ரேஷன்கார்டில் இருக்காது, ஆனால் எல்லாமே அந்த தெய்வம் தான். என் குலதெய்வத்தை கும்பிடும் போது நானே பூசாரி ஆகிவிடுவேன். விருதுநகர் பக்கம் எல்லாம் முனியாண்டி தெய்வத்திற்கு பெரிய வழிபாடுகள் நடக்கும்.
குல தெய்வத்தை கும்பிடும் போது நாமே தீபம் காட்டலாம், பூஜை செய்யலாம். பெரிய கோவில்களில் இதை செய்வதற்கு பூசாரியை வைத்திருப்பார்கள். சிலர் கடவுளை நம்புபவன் முட்டாள் என்பார்கள். முனியாண்டியை நம்புபவர்கள் முட்டாள் என்று சொல்லிப் பாருங்கள். மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் முனியாண்டி குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்படுபவர். யார் எதுவும் சொல்லமாட்டார்களோ அவர்களை ஏதாவது சொல்லிவிட்டு போய்விடுவார்கள். விஜயகாந்த் அவர்கள் தருமபுரி படத்தில் முனியாண்டி வேஷம் போட்டுவிட்டு வந்து நிற்கும் போது அய்யனார் போலவே இருந்தார். இந்த நாயகன் ஜெயகாந்திற்கும் முனியாண்டி வேஷம் சிறப்பாக பொருந்தி இருக்கிறது. கருப்பாக இருப்பவர்களும் பெரிய ஹீரோக்கள் ஆகிவிட முடியும் என்று ரஜினிகாந்த் நிருபித்தார். அதிலிருந்து கருப்பான ஹீரோக்களும் ஜெயிக்க முடியும் என்கின்ற நம்பிக்கை வந்திருக்கிறது. பாரதிராஜா இயக்கத்திற்கு வந்தப் பிறகு தான் எங்களைப் போன்று கிராமத்தில் இருந்து வருபவர்களுக்கு இயக்கத்திற்கான கதவு திறந்தது.
செளந்தர்யன் பார்க்க சைலண்டாக இருப்பார். ஆனால் பாடல்களில் பட்டையை கிளப்பிவிடுவார். அப்படித்தான் இப்படத்தின் பாடல்களும் இருக்கிறது. பாடல்களில் முனியை விட காமம் மற்றும் காதலின் கனி அதிகமாக தெரிகிறது. இது போன்ற பாடல்களில் பாடலாசிரியர் ஸ்நேகன் பின்னி எடுப்பார். இதிலும் அப்படியே செய்திருக்கிறார். தயாரிப்பாளர் விருதுநகரை சேர்ந்தவர் என்று சொன்னார்கள். அது காமராஜர் பிறந்த ஊர். அதை நினைத்தே அவர் பெருமைப்பட வேண்டும். இன்னும் முதல்வராக வர விரும்புபவர்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியை கொடுப்போம் என்று தான் சொல்கிறார்கள். அவர் ஒருவரே என்றும் முதல்வர்களுக்கான அரிச்சுவடி. நடிகை மீரா ராஜ் சிறப்பாக நடனம் ஆடி நடித்திருக்கிறார். பாடலில் அவரின் நலினங்கள் சிறப்பாக இருந்தது. இப்பொழுதெல்லாம் நாயகிகளைப் பற்றி பேசவே பயமாக இருக்கிறது. எனவே சகோதரி மீரா ராஜ் அவர்களை சகோதரன் பேரரசு வாழ்த்துக்கிறேன். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று பழமொழி சொல்வார்கள். இப்பொழுதெல்லாம் கூத்தாடி ரெண்டு பட்டால், ஊருக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. நாம் எல்லோரும் ஒரே குடும்பம். நாம் நமக்குள் இப்படி சண்டையிடுவது நம் வளர்ச்சிக்கு நல்லதல்ல.. இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
மேலும் படிக்க | ஞானவேலின் பின்னால் சூர்யா, கார்த்தி? தக்கபதிலடி கொடுத்த கரு பழனியப்பன்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ