என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் நஞ்சு அருந்தி தற்கொலை முயற்ச்சிக்கு முயன்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியும், நியாயப்படியும் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலார் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
என்எல்சி தொழிலாளர்கள் 25 பேர் நஞ்சு அருந்தி தற்கொலைக்கு முயன்ற தகவல் அதிர்ச்சி அளிக்கின்றது. சுரங்க விரிவாக்கத் திட்டங்களுக்கு வீடு மற்றும் நிலங்களைத் தாரை வார்த்துக் கொடுத்த 13000 பேர், நிரந்தரப் பணி வாய்ப்பு இன்றி ஒப்பந்தத் தொழிலாளர்களாகப் பணியாற்றுகின்றனர்.
அவர்களுள், முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 40 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டதுடன், வேலை நாட்களையும் பாதியாக என்.எல்.சி. நிர்வாகம் குறைத்தது. ஏற்கனவே மிகக் குறைந்த ஊதியத்தில் வாழ்க்கைப்பாட்டுக்குத் திண்டாடி வரும் நிலையில், இப்போது வேலை நாட்களையும் பாதியாகக் குறைத்ததால், அத்தொழிலாளர்களின் குடும்பங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
தங்களுக்கு முழு பணி நாள் அளிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே பணியாற்றிய முதல் சுரங்க விரிவாக்கத்தில் பணியமர்த்த வேண்டும் என்றும் பல கட்டங்களாக அறவழியில் போராடி வந்தனர்.
அவர்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்காததால், ஒப்பந்தத் தொழிலாளர்கள் 25 பேர் இன்று முதல் சுரங்க விரிவாக்க நுழைவாயிலில் நஞ்சு அருந்தி உள்ளனர். அதில் 2 தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கின்றது. 25 தொழிலாளர்களையும் காப்பாற்றுவதற்கு உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ஏதேனும் உயிர் இழப்புகள் நேர்ந்தால், அதற்கு மத்திய மாநில அரசுகளும், நெய்வேலி நிலக்கரி நிர்வாகம், காவல்துறையும்தான் பொறுப்பு ஆகும்.
உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் படிப்படியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; வீடு, நிலங்களைக் கொடுத்துவிட்டு, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, சட்டப்படியும், நியாயப்படியும் உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.