சீன உதவியை விட இந்திய உதவிகளே எமக்கு அதிகம் கிடைத்துள்ளது: மீனவ கூட்டுறவு சங்க செயலாளர்

Sri Lanka: மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி வடபகுதி மக்களுக்கு இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் ஆதரவு பெருவாரியாக கிடைத்துள்ளது: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம் 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 3, 2022, 02:37 PM IST
  • இந்தியாவுக்கு இலங்கை அரசு துரோகத்தை செய்து விடக்கூடாது: மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம்
  • தேவை அறிந்து , உணர்வு ரீதியாக உதவி செய்யக்கூடிய வல்லமை இந்திய மக்களிடம் உள்ளது: என்.எம்.ஆலம்
  • இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் இந்தியாவே குரல் கொடுத்து வருகின்றது: என்.எம்.ஆலம்
சீன உதவியை விட இந்திய உதவிகளே எமக்கு அதிகம் கிடைத்துள்ளது: மீனவ கூட்டுறவு சங்க செயலாளர் title=

இந்தியாவுக்கு இலங்கை அரசு துரோகத்தை செய்து விடக்கூடாது. தேவை அறிந்து , உணர்வு ரீதியாக உதவி செய்யக்கூடிய வல்லமை  இந்திய மக்களிடம் உள்ளது என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கூறியுள்ளார். மீனவர்களின் அச்ச நிலையை போக்க கூடியவாறு கடற்றொழில்  அமைச்சரின் பதிலில் திருப்தி  இல்லையெனில் தேசிய ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்க உடன்பாடு  கண்டிருக்கும் முல்லைத்தீவு மீனவர்களுடைய போராட்டத்திற்கு மன்னார் மாவட்டமும் முழு பங்களிப்பை செய்யும்  என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள மீனவர்களை அழைத்து நேற்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பாகவும் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் ஒரு கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு இருந்ததாகவும் கூறினார். 

‘இதில் மீனவ கூட்டுறவு சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், போன்றவற்றின் தலைவர், செயலாளர் கலந்து கொண்டார்கள். தேவன்பிட்டி தொடக்க மறிச்சிக்கட்டி வரை தலைமன்னார் தொடக்கம் மன்னார் வரையான பெரும்பாலான மீனவ சங்கங்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடைய பல கருத்துக்கள் இங்கு பரிமாற பட்டிருந்தன.’ என்றார் அவர்.

மேலும் படிக்க | விஞ்ஞான ஊழலெல்லாம் திமுகவுக்கு கை வந்த கலை - ஜெயக்குமார் விமர்சனம் 

இலங்கையில் தற்போது கொலன்னாவையில் வழங்கப்பட்டு வருகின்ற வர்த்தக நடவடிக்கைக்கான எரிபொருள்  464 ரூபா பெருமதியிலிருந்து எரிபொருளை மீனவர்கள் பெற்றுக் கொள்வதாயின் அதற்கு உரிய ஏற்பாட்டை  செய்து தருவதாக மாவட்டச் செயலாளர் கூறியதற்கு இணங்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் அதனைப் பெற்றுக் கொள்ள பெரும்பாலான மீனவ கூட்டுறவு சங்கங்கள் கருத்தை முன் வைத்திருந்தாலும் அவ்வாறான எரிபொருளை எதிர்காலத்தில் அரசனது இந்த விலையை நிர்ணயித்து மீனவர்களுக்கு  வழங்க முன் வரும் என்ற அச்சத்தையும் எமக்கு ஏற்படுத்தி உள்ளது என்று மீனவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அப்பால் கடந்த திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய ரீதியில் உள்ள மீனவர் பிரச்சினைகள் குறிப்பாக எரிபொருள் பிரச்சினையை எவ்வாறு கையாள வேண்டும் என்று கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் உடனடியாக கடற்றொழில் அமைச்சருக்கு தெரியப் படுத்தப் பட்டு  அவருடைய ஊடக வெளியீடாக  பத்தாயிரம் மெட்ரிக் டொன் மண்ணெண்ணெய் சி.எஸ்.சி என்னும் எரிபொருள் நிரப்பு நிலைய மூடாக மீனவர்களுக்கு வழங்கும் திட்டம் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.

ஆனால்  இந்த பத்தாயிரம் மெட்ரிக் டொன் எரிபொருளை இலங்கை முழுவதும் உள்ள மீனவர்களுக்கு வழங்க முடியுமா? என்ற கேள்வி இருக்கிறது.
 இந்த பத்தாயிரம் மெட்ரிக் டன் மண்ணெண்ணெய் வந்ததன் பிறகு  தொடர்ச்சியாக இந்த  நடவடிக்கை நடைபெறுமா? என்ற கேள்வியும் இருக்கிறது.

எனவே மீனவர்களின் அச்ச நிலையை போக்க கூடியவாறு கடற்றொழில்  அமைச்சரின் பதிலில் திருப்தி  இல்லையெனில் தேசிய ரீதியாக போராட்டத்தை முன்னெடுக்க உடன்பாடு  கண்டிருக்கும்  அவர்களுடைய போராட்டத்திற்கு மன்னார் மாவட்டமும் முழு பங்களிப்பை செய்யும்.
 இந்த விடயத்தையும் நேற்றைய கூட்டத்தில் மீனவர்களுக்கு தெளிவாக விளங்கப்படுத்தி இருந்தோம்.

‘பெரும்பாலான மீனவர்கள் தற்போது மீன்பிடி சீசனாக இருக்கின்றபடியால் எப்படியாவது எங்களுக்கு எரிபொருட்களை தந்தாக வேண்டும். வெளிச்சந்தையில் நாங்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மண்ணெண்ணெய் கொள்வனவு செய்கின்றோம். இவ்வாறு 464 ரூபாய்க்கு நாங்கள் மண்ணெண்ணெய்யை கொள்வனவு செய்வது எமக்கு  பொருத்தமான விடயம் தான் என்று பெரும்பாலான மீனவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகையால் இதனையும் நாங்கள் கருத்தில் கொண்டு மாவட்டச் செயலாளர் இடம் இது தொடர்பாக கலந்துரையாடிய போது ஒன்று போராட்டத்தை முன்னெடுத்து தான் இந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதாயின் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அல்லது மாவட்டத்தில் இருக்கும் மீனவர்களின் எரிபொருள் பிரச்சனையை நிறைவு செய்ய மாவட்டச் செயலாளர் அவர்கள் பொருத்தமான நடவடிக்கையை மீனவர்களுக்கு பெற்று தருவதாயின் அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெளிவாக கூறியிருக்கின்றோம். 
இருந்தாலும் மீன்பிடி அமைச்சரிடம்  மன்னார் மாவட்டம் தொடர்பாக நாங்கள் கோரிக்கை முன்வைக்கின்றோம். நீங்கள் கடந்த காலத்தில் வந்த எரிபொருளை குறிப்பாக யாழ் மாவட்ட தீவகங்களுக்கு  பெற்று கொடுத்தீர்கள்.

 தற்போது வரும் பத்தாயிரம் மெட்ரிக் டொன் மண்ணெண்ணையை  எவ்வாறு பங்கிட போகின்றீர்கள். மாவட்டத்திற்கா? அல்லது மாகாணத்திற்கா? அல்லது தேசிய அளவிலான அனைத்து மீனவ சங்கங்களுக்கும் என்ற பதில் உங்களிடம் இருந்து வரவில்லை.
 பத்தாயிரம் மெட்ரிக் தொன் உடன் நின்று விடுமா அல்லது தொடர்ச்சியாக இந்த மீனவர்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறதா? என்று பதிலையும் உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம்.’ என்று தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘மன்னார் மாவட்ட மக்களுக்கு மாத்திரமின்றி வடபகுதி மக்களுக்கு இந்திய அரசினதும், இந்திய மக்களினதும் ஆதரவு பெருவாரியாக எமக்கு கிடைத்துள்ளது. இலங்கையை ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொண்டால் சீன உதவியை விட இந்திய உதவிகளே எமக்கு அதிகம் கிடைத்துள்ளது. இடர் காலத்தில் அவர்களால் வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பெறுமதியான உதவிளை நாங்கள் பெற்றுள்ளோம்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படுகின்ற ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் இந்தியாவே குரல் கொடுத்து வருகின்றது. தமிழக மக்கள் எமக்கான நீதியை பெற்றுத்தர இன்று வரை போராடி வருகின்றனர். இடைக்கிடையே மீனவர்கள் தொடர்பாக எமக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டாலும், ஒட்டுமொத்தமாக தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் என்று பார்க்கின்ற போது நாங்கள் இந்தியாவிற்கு துரோகத்தை செய்து விடக் கூடாது. சீனா தேவைக்கு மாத்திரம் ஒரு நாட்டை பயன்படுத்துகின்றது. 

தமது பணத்தை வழங்கி அதனூடாக ஒரு நாட்டை எவ்வாறு அடிமைப்படுத்தி ஆட்சி செய்யலாம் என்ற சிந்தனையே சீனாவிற்கு உள்ளது.
 ஆனால் இந்தியாவிற்கு அவ்வாறான ஒரு தேவை இல்லை. தேவை அறிந்து உதவி செய்யக்கூடிய அல்லது உணர்வு ரீதியாக உதவி செய்யக்கூடிய வல்லமை இந்த மக்களிடம் உள்ளது. எனவே இந்தியாவுக்கு இலங்கை அரசு துரோகத்தை செய்து விடக்கூடாது. எமது நாட்டிற்குள் வந்து இன்னும் ஒரு நாடு உளவு பார்ப்பதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது.’ என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் மேலும் 
தெரிவித்தார்.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற மனு தாக்கல் 

Trending News