UAE கோடை விடுமுறை: பெற்றோருக்கு அதிகாரிகள் விடுத்த கோரிக்கை

UAE: கோடை விடுமுறை காலத்தில், ஆன்லைன் அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடிகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 23, 2022, 04:36 PM IST
  • அபுதாபியில் இது பள்ளி விடுமுறை காலம்.
  • பெற்றோருக்கு அதிகாரிகள் விடுத்த கோரிக்கை.
  • குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று குடும்பங்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
UAE கோடை விடுமுறை: பெற்றோருக்கு அதிகாரிகள் விடுத்த கோரிக்கை title=

அபுதாபியில் இது பள்ளி விடுமுறை காலம். இந்த நேரத்தில் குழந்தைகள் பல வித பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். இந்த காலத்தில் குழந்தைகளின் பெரும்பாலான பொழுதுபோக்கு ஆன்லைனிலேயே இருக்கிறது. இதில் பல ஆபத்துகளும் உள்ளன. இதை தடுக்கும் வகையில், கோடை விடுமுறை காலத்தில், ஆன்லைன் அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடிகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், குழந்தைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் குடும்பங்களை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இணைய அச்சுறுத்தல், இணைய மோசடிக்காரர்கள், அச்சுறுத்தல், தனிப்பட்ட தகவல்களை இடுகையிடுதல், பொருத்தமற்ற உள்ளடக்கத்தை அணுகுதல் மற்றும் ஃபிஷிங் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளுக்கு குழந்தைகள் ஆன்லைனில் ஆளாகக்கூடும் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது. 

குழந்தைகள் ஆன்லைன் கேம்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்களில் பல மணிநேரங்களை ஆன்லைனில் செலவழிப்பதால், இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு அவர்கள் பலியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது. 

'பாதுகாப்பான கோடை' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களும் மோசடிகளில் மாட்டிக்கொள்ளக்கூடும் என்றும் தற்செயலாக தீம்பொருளைப் பதிவிறக்கம் செய்யக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | NRI இந்தியாவில் சொத்து வாங்க முடியுமா? இதற்கான விதிகள் என்ன? 

பல குழந்தைகளுக்கு ஸ்னாப்சாட், வாட்ஸ்அப் அல்லது ஃபெஸ்புக் போன்ற தளங்களில் கணக்குகள் உள்ளன. ஆனால், சில பெற்றோர்களுக்கோ இவை என்னவென்று கூட தெரிவதில்லை. பாலியல் குற்றவாளிகள் மற்றும் பிற குற்றவாளிகள் குழந்தைகளின் அப்பாவித்தனம், பெரியவர்களின் மேற்பார்வையின்மை மற்றும் அவர்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தி, இணையத்தில் அடிக்கடி அவர்களைப் பின்தொடர்வதாக போலீசார் தெரிவித்தனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் செயல்பாடுகளை எப்போதும் கண்காணிக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆன்லைன் கேம்கள் மூலம் இளைஞர்களை குறிவைத்து கொள்ளையடிப்பவர்கள் பற்றி பெற்றோரை எச்சரித்த அதிகாரிகள், தங்கள் குழந்தைகள் விளையாடும் எலக்ட்ரானிக் கேம்களை கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நம்பகமான மூலத்திலிருந்து வந்தாலொழிய, ஆன்லைனில் மின்னணு கேம்களில் குழுசேரவோ அல்லது வாங்கவோ வேண்டாம் என்றும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆன்லைன் மோசடிக்காரர்களிடமிருந்து குழந்தைகளை பாதுகாக்க, குழந்தைகளின் சாதனங்களில் பெற்றோர் கட்டுப்பாட்டு கண்காணிப்பு திட்டங்களைப் பயன்படுத்துமாறு அபுதாபி காவல்துறை குடும்பங்களை வலியுறுத்தியது.

அபுதாபி காவல்துறையில் குற்றப் புலனாய்வு மற்றும் புலனாய்வு இயக்குநரகத்தில் இணையத்தில் உள்ள சிறுவர் சுரண்டல் பிரிவின் இயக்குநர் கேப்டன் யாகூப் யூசுப் அல் ஹம்மாடி, சில பெற்றோர்கள் இணையத்தில் பல்வேறு கட்டுப்பாட்டு கண்காணிப்பு திட்டங்கள் அல்லது செயலிகளைப் பயன்படுத்தத் தயங்குகிறார்கள் என்றும் இது ஆபத்தானது என்றும் கூறினார். 

நாட்டில் உள்ள ஒரு சிறப்பு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒவ்வொரு 20 தந்தைகளில் ஒருவர் மட்டுமே குழந்தைகளின் சாதனங்களில் பெற்றோர் கட்டுப்பாட்டு கண்காணிப்பு திட்டத்தைப் பயன்படுத்துகிறார் என்று அவர் கூறினார்.

சைபர் கிரைமினல்களிடம் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக, தங்கள் குழந்தைகள் பார்வையிடும் இணையதளங்களை அவர்களுக்குத் தெரியாமல் கண்காணிக்க, ஆன்லைன் கட்டுப்பாட்டு திட்டங்களைப் பயன்படுத்துமாறு பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தினார்.

வெவ்வேறு சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் பெற்றோர் கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் குழந்தைகளுக்கான கட்டுப்பாட்டு விதிகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அவை கற்றல், விளையாடுதல் மற்றும் இணையத்தில் உலாவுதல் ஆகியவற்றின் போது வழிகாட்டுதலுக்கு பங்களிக்க முடியும்.

இணையம் அனைவருக்கும் ஆபத்தானது. குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் குறிப்பாக ஆன்லைனில் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அல் ஹம்மாடி கூறினார். 

24 மணிநேரமும் செயல்படும் பாதுகாப்பு, சமூகம் மற்றும் போக்குவரத்து தகவல்களைப் பெறும் பாதுகாப்புத் தகவல்தொடர்பு சேனலான அமானிடம், 8002626 (AMAN2626) என்ற கட்டணமில்லா எண் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் மூலமாகவோ (2828), அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ (aman@adpolice.gov.ae) அல்லது அபுதாபி போலீஸ் ஜெனரல் கமாண்டின் ஸ்மார்ட் அப்ளிகேஷன் மூலமாகவோ ஆன்லைன் குற்றவாளிகளைப் பற்றி புகாரளிக்கலாம் என்று குடும்பங்களுக்கும் குழந்தைகளுக்கும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | துபாய் லக்கி டிராவில் 1 மில்லியன் டாலர் வென்ற இந்தியர் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News