அண்ணா டூ ஸ்டாலின் - கோட் சூட்டில் மாஸ் காட்டிய முதலமைச்சர்கள்

தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் வெளிநாட்டு பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு அவர் கோட் சூட் சகிதம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் மற்றும் முதலீட்டர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

1 /7

பெரும்பாலும் வெள்ளை வேட்டி சட்டையில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் புறப்பட்டு சென்றபோது சிவப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடனான சந்திப்பில் கோட் சூட் அணிந்து வலம் வந்ததை சமூக வலைதளங்களில் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். 

2 /7

தமிழக அரசியல் தலைவர்கள் வெள்ளை வேட்டி சட்டையில் தான் பெரும்பாலும் காட்சியளிப்பார்கள். ஆனால் வெளிநாடு பயணங்களில் மட்டும் கோட் சூட் போன்ற மார்டன் உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாட்டு சுற்று பயணத்தில் வெள்ளை வேட்டி சட்டை என வழக்கமான ஆடைகளையே அணிந்தார். ஆனால் இதனை மாற்றி ட்ரெண்ட் செட்டராக மாறினார் அண்ணா. 

3 /7

அண்ணா தமிழக முதலமைச்சராக இருந்தபோது 1968-ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின்போது கோட் சூட் அணிந்து கெத்தாக வலம் வந்தார் அண்ணா. 

4 /7

அண்ணா வழியை பின்பற்றிய கருணாநிதி 1970-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு கோட் சூட் அணிந்து சென்று மாஸ் காட்டினார். 

5 /7

அண்ணா தொடங்கிய இந்த வழக்கமானது கருணாநிதி வழியில் எம்.ஜி.ஆரும் பின் தொடர்ந்தார். திரைப்படங்களில் கோட் சூட் அணிந்து ஏற்கெனவே பழக்கப்பட்ட அவர், முதலமைச்சரான பிறகு வெளிநாட்டு பயணங்களில் தனது அடையாளமான வெள்ளை நிற தொப்பி உடன் கோட் சூட் அணிந்தவாரே சந்திப்புகளில் பங்கேற்றார். 

6 /7

இதேபோல் 2019-ம் ஆண்டு அமெரிக்கா, லண்டன், துபாய் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமெரிக்காவில் விருது வழங்கும் விழாவுக்கு சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கோட் சூட் அணிந்தது சமூக வலைதளங்களில் அதிகம் பேசு பொருளானது. 

7 /7

மு.க.ஸ்டாலினின் இந்த துபாய் பயணமும் பெரிய அளவில் பேசப்பட்டு வரும் வேளையில், வெளிநாட்டு பயணங்களில் தனது தந்தை அணிந்ததை போன்றே மாடர்ன் உடையில் அவர் வலம் வந்தது திமுகவினரை வெகுவாக கவர்ந்துள்ளது. கோட் சூட் என்பது வெறும் ஆடையாக பார்க்காமல் அடையாள அரசியலாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதனை ஸ்டாலினும் கையில் எடுத்திருப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.