வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக (Bank Locker) வசதியை பயன்படுத்துவது தொடர்பாக ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜனவர் 1 முதல் அமலுக்கு வருகிறது.
வங்கியில் தீ விபத்து அல்லது கட்டிடம் இடிந்து விழுந்து சேதம் அடைதல், போன்ற சமயங்களில், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்கவும் புதிய விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
ஆனால், புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைபேரழிவின் காரணமாக வங்கி லாக்கர் மற்றும் லாக்கரில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது.
வங்கி லாக்கரில் அபாயகரமான பொருட்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான பொருட்களை வைக்கக்கூடாது. அதனை மீறினால் வாடிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புதிய விதிகள் கூறுகின்றன.
திருத்தப்பட்ட ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் மூலம், நீண்ட நாட்களுக்கு திறக்கப்படாமல் இருக்கும் வங்கி லாக்கரை உடைக்க, வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படுள்ளது.
நீண்ட நாட்கள் இயக்கப்படாமல் இருக்கும் லாக்கரில் உள்ளவற்றை, அதன் நியமனதாரர்/சட்டப்பூர்வ வாரிசுக்கு வழங்கவும் அல்லது பொருட்களை வெளிப்படையான முறையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவெடுக்கவும் வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.