எலக்ட்ரிக் பைக் மற்றும் பெட்ரோல் பைக்குகளுக்கு இடையே கடுமையான விற்பனை போட்டி நடைபெற்று வருகிறது
உலகம் முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்களுடைய மோகம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா நிறுவனத்தினுடைய எலக்ட்ரிக் வகை கார்கள், பேருந்துகள் அதிகம் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
தற்போது தான் இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் மீதான மோகம் அதிகரித்து இருக்கிறது. மேலும் முன்னணி நிறுவனங்கள் பலவும் எலக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தியில் இறங்கி இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது காலநிலை மாற்றம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வு. இதனால் ஓலா, டிவிஎஸ், பஜாஜ், ஹீரோ போன்ற நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் தீவிரம் காட்டுகின்றன.
மேலும் 4 சக்கர எலக்ட்ரிக் வாகன உற்பத்தியும் இந்தியாவில் தற்போது சூடு பிடித்திருக்கிறது என்றே சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் பலரும் வாகனங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அதிக அளவிலான வாகன விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனம் வாங்குபவர்களுக்கு பெரிய சந்தேகம் எழுந்து இருக்கிறது.
பெட்ரோல் வாகனம் வாங்கலாமா அல்லது எலக்ட்ரிக் வாகனம் வாங்கலாமா என்று. இந்த கேள்விக்கு பதில் அளிப்பதே இந்த செய்தி. குறிப்பாக இந்தியாவில் மிகப் பிரதானமாக பார்க்கப்படுவது விலை. குறிப்பாக முன்னணி இருசக்கர வாகனங்களின் ஸ்கூட்டி வடிவிலான இருசக்கர வாகனங்களின் விலை 80 ஆயிரம் முதல் 1.20 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதே சமயம் எலக்ட்ரிக் வாகனங்கள் 1.46 லட்சம் 1.50 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் வாகனங்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை பன்மடங்கு கூடுதலாக இருக்கிறது. அதே நேரம் மைலேஜ் என்று எடுத்துக் கொண்டால் பெட்ரோல் வாகனங்களுக்கு 103 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டால் 45 கிலோமீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தரும்.
இதனால் 10 கிலோ மீட்டருக்கு 21 ரூபாய் வரை செலவாகிறது. அதே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எடுத்துக் கொண்டால் ஒரு முறை சார்ஜர் செய்தால் 80 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். 10 கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே செலவாகும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்கியதற்கு பிறகான செலவுகள் மிக குறைவு. ஆனால் பெட்ரோல் வண்டிகளை பொறுத்த வரை சர்வீஸ் சார்ஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு ஆவதை விட பன்மடங்கு அதிகமாக இருக்கும்.
அதேசமயம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக தூரத்திற்கு பயணம் செய்வது சிரமம். அதிலும் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களுக்கு பொது இடங்களில் சார்ஜ் செய்யும் வசதி மிக குறைவாகவே இருக்கிறது.
வருங்காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சார்ஜ் ஏற்று வசதி அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுவே பெட்ரோல் வாகனங்களுக்கும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் உள்ள நிறை குறைகள். இதில் எதை வாங்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.