Electric Scooters in India: இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்கள் பிரிவில் போட்டி அதிகரித்து வருகிறது. டி.வி.எஸ், பஜாஜ் போன்ற ஜாம்பவான் நிறுவனங்களுக்குப் பிறகு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் சந்தையில் வந்தவுடன் போட்டி இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்த மூன்று ஸ்கூட்டர்களும் சந்தையில் மிகப்பெரிய இயக்கத்தைக் காணக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். மூன்று ஸ்கூட்டர்களும் ஒன்றுக்கொன்று கடுமையான போட்டியைக் கொடுக்கும் என்பதும் நிபுணர்களின் கூற்றாக உள்ளது.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் TVS iQube-ன் விலை ரூ .1,20,000 (ஆன்ரோட் விலை) ஆகும். பஜாஜ் சேதக்கின் பெங்களூர் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலை ரூ .1,15,000 ஆக உள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு அட்டகாசமான ஸ்கூட்டருடன் வாடிக்கையாளர்களுக்கு விலையிலும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியத்தை அளிக்கக்கூடும் என நம்பப்படுகின்றது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் முதல் மின்சார ஸ்கூட்டர் தொழிற்சாலை அமைக்க ரூ 2,400 கோடி முதலீடு செய்வதாக ஓலா அறிவித்திருந்தது. இதன் மூலம் 10,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இது உலகின் மிகப்பெரிய ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையாக இருக்கும். ஆண்டு உற்பத்தித் திறன் 2 மில்லியன் யூனிட்டுகள் ஆகும்.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தவுடன், பஜாஜ் சேத்தக் ஈகோ மோடில் 95 கிலோமீட்டர் வரையிலும், TVS iQube ஈகோ மோடில் 75 கிலோமீட்டரும் பயணம் செய்யும். ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்த இரு ஸ்கூட்டர்கலிடமிருந்து நல்ல போட்டி இருக்கும். ஓலா முழு சார்ஜில் எத்தனை கிலோமீட்டர் செல்லக்கூடிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்கிறது என்பதை பார்க்க வாடிக்கையாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஊடக அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் TVS iQube-ன் 355 யூனிட்கள் விற்கப்பட்டன. பஜாஜ் சேதக்கின் 90 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டன. பஜாஜ் ஆட்டோ சேத்தக்கின் முன்பதிவை மீண்டும் திறந்தது. ஆனால் தேவை அதிகமானதால், 48 மணி நேரத்திற்குப் பிறகு அதை நிறுத்த வேண்டியதாயிற்று. TVS iQube இன் முன்பதிவு இப்போதும் திறந்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகைக்குப் பிறகு விற்பனைப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படும்.
ஓலா ஹைப்பர் சார்ஜர் நெட்வொர்க்கை அறிமுகம் செய்கிறது. இது உலகின் மிகப்பெரிய மின்சார இரு சக்கர வாகனங்கள் சார்ஜிங் நெட்வொர்க்காக இருக்கும். இதன் கீழ் 400 நகரங்களில் 1 லட்சம் சார்ஜிங் புள்ளிகள் நிறுவப்படும். முதல் ஆண்டில், நாட்டின் 100 நகரங்களில் 5,000 சார்ஜிங் புள்ளிகள் நிறுவப்படும். இவை வெறும் 18 நிமிடங்களில் ஸ்கூட்டரை 50 சதவீதம் சார்ஜ் செய்யும் திறன் படைத்தவவை.