கொரோனா தொற்று நாடு முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது. இதற்கிடையில், கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. இப்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
தற்போது, இரண்டு வகையான கோவிட் 19 தடுப்பூசிகள் நாட்டில் உள்ளன. எனினும், இவற்றைப் பற்றிய வதந்திகள் பல வகைகளில் பரவி வருகின்றன.
கோவிட் 19 தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பாக பெண்கள் மத்தியில் பல வகையான குழப்பங்கள் உள்ளன. கொரோனா தடுப்பூசி பற்றி சமூக ஊடகங்களில் பல விவாதங்களும் வதந்திகளும் பரவி வருகின்றன. சிலர் மாதவிடாய் காலங்களில் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள கூடாது என்று கூறுகிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொண்டால், பெண்கள் கருத்தரிப்பில் பிரச்சனைகள் வரலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இவற்றின் பின்னணியில் உள்ள உண்மையை அறிந்து கொள்ளலாம்.
மாதவிடாய் காலங்களில் பெண்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது என்றும் கொரோனா தடுப்பூசி சில காலத்திற்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது என்றும் சிலர் வாதிட்டனர். எனவே, பெண்கள் மாதவிடாய் காலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது சரியானது அல்ல என்பது அவர்கள் தரப்பு வாதமாக உள்ளது.
நியூயார்க் டைம்ஸில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை, பெண்கள் மாதவிடாய் காலங்களில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளக் கூடாது என்பதை நிரூபிக்கும் எந்த ஒரு அறிக்கையும் இதுவரை வெளிவரவில்லை என கூறியுள்ளது. மாதவிடாய் காலங்களிலும் பெண்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
கோவிட் 19 தடுப்பூசியை செலுத்திக்கொள்வதால், மாதவிடாய் கால சுழற்சி பாதிக்கப்படுகிறது என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இதுவரை எந்தவொரு ஆராய்ச்சியிலும் இப்படி நிரூபிக்கப்படவில்லை. இந்த தடுப்பூசி பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மாதவிடாய்க்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மாதவிடாய் காலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. (குறிப்பு: தடுப்பூசி செலுத்திக்கொள்வது தொடர்பான எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கு ஜீ மீடியா பொறுப்பேற்காது.)