‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். லண்டனைச் சேர்ந்த இவர் ‘தாண்டவம்’, ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘தேவி’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள எமி ஜாக்சன் ‘போகி மேன்’ என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். மேலும், ‘சூப்பர் கேர்ள்’ என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள எமி கடந்த புத்தாண்டு தினத்தில், தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். தனது காதலர் ஜார்ஜ், லண்டனில் தொழிலதிபராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
“2019-ம் ஆண்டின் ஜனவரி முதல் நாள். நம்முடைய வாழ்க்கையில் சாகசம் தொடங்கியிருக்கிறது. நான் உன்னைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிக சந்தோஷமான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள எமி ஜாக்சன், காதலர் தன்னை முத்தமிடும் புகைப்படத்தையும் பதிவிட்டார்.
இதற்கிடையில் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது என்றும், விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.
இதுகுறித்து பதிவிட்டுள்ள “இந்த விஷயத்தைக் கூரையிலிருந்து கத்திச் சொல்லவேண்டும் என காத்துக் கொண்டிருந்தேன். இன்று அன்னையர் தினம் என்பதால், இதைவிட சிறந்த தருணம் இருக்க முடியாது. இந்த உலகத்தில் எதைவிடவும் உன்னை மிக அதிகமாக நான் நேசிக்கிறேன். உண்மையான, தூய்மையான அன்பு. நாம் நமது குட்டி லிப்ராவைச் சந்திக்கப் பொறுமையின்றிக் காத்திருக்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார் எமி ஜாக்சன்.