சென்னை: நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் மொழி காக்க, தமிழையும் ஆட்சிமொழி ஆக்க எனக் கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று, நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில், தமிழகம் உட்பட மீதமுள்ள மாநிலங்களை சேர்ந்த எம்.பி-க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
அந்தவகையில் தமிழ் நாட்டில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.கள் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். சிலர் "தமிழ் வாழ்க", சிலர் "தமிழ் வாழ்க" "பெரியார் வாழ்க" சிலர் "காமராஜர் வாழ்க" சிலர் "கலைஞர் புகழ் வாழ்க" மற்றும் அதிமுக எம்பி "வாழ்க எம்ஜிஆர்" வாழ்க ஜெயலலிதா" எனக்கூறி பதவியேற்றுக் கொண்டனர்.
தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றப் போது "தமிழ் வாழ்க" என்று சொன்னபோதெல்லாம் பாரதீய ஜனதா எம்.பி.க்கள் "பாரத் மாதாகீ ஜே" என்று கோஷமிட்டனர். மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து, ட்விட்டரில் #தமிழ்வாழ்க என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்தநிலையில், இதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து. அவர் கூறியது,
"நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்.
நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க"
இவ்வாறு கூறியுள்ளார்.