பிள்ளையார் சுழி போட்டால் வெற்றி நிச்சயமா..? ‘உ’ எழுத்திற்குள் இருக்கும் ஆன்மிக அர்த்தம்..!

Pillaiyar Suzhi Meaning In Tamil: நாம் அனைவரும் தேர்வு எழுத ஆரம்பிக்கும் முன்னர் பல முறை ‘உ’ என்ற பிள்ளையார் சுழியை போட்டிருப்போம். இதற்கு அர்த்தம் என்ன..? இங்கே பார்க்கலாம். 

Written by - Yuvashree | Last Updated : Sep 16, 2023, 12:47 PM IST
  • எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்போம்.
  • பிள்ளையார் சுழிக்கு அர்த்தம் என்ன?
  • ‘உ’ என்ற எழுத்திற்கும் பிள்ளையாருக்கும் என்ன தொடர்பு..?
பிள்ளையார் சுழி போட்டால் வெற்றி நிச்சயமா..? ‘உ’ எழுத்திற்குள் இருக்கும் ஆன்மிக அர்த்தம்..!  title=

நம்மில் பலர் தேர்வு எழுதும் முன்னரோ அல்லது திருமண பத்திரிகை எழுதும் முன்னரோ பிள்ளையார் சுழி போட்டு எழுத தொடங்கியிருப்போம். இதை ‘பிள்ளையார் சுழி’ என்று குறிப்பிடுவதற்கு பின்னால் நிறைய காரணங்கள் உள்ளதாக பெரியவர்கள் கூறுவதுண்டு. இதற்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன.? பிள்ளையார் சுழி போட்டால் நல்லதே நடக்குமா..? முழு விளக்கம் இதோ. 

பிள்ளையார் சுழி:

தமிழ் உயிர் எழுத்துக்களில் ‘உ’கரம் என்ற எழுத்து மிகவும் முக்கியத்துவம் அமையப்பெற்றது. இந்த எழுத்து தமிழ் கடவுளான விநாயக பெருமானுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இதை ‘பிள்ளையார் சுழி’ என்று குறிப்பிடுவர். 

முன்னொரு காலத்தில் எழுதுவதற்கு காகிதமோ பலகையோ கிடையாது. எதை எழுதினாலும் அதை ஓலைச் சுவடியில்தான் எழுத வேண்டும். அதுவும், எழுத்தானி கொண்டு எழுத வேண்டிய நிலையில் இருந்தனர், அன்றைய அறிஞர்கள். தமிழ் எழுத்துக்கள் யாவும் வலைந்து நெளிந்து இருக்கும். ஒரு சில எழுத்துக்களுக்கு சுழிகள் தேவைப்படும். செம்மை இல்லாத ஓலைச்சுவடிகள் எளிதில் கிழிந்துவிடும் தன்மை கொண்டவை. அதில் எழுத்தாணி வைத்து எழுதும் போது பல முறை தொடக்கத்திலேயே ஓலைச்சுவடிகள் பழுதடைந்து விடும். இதனால் அதை உபயோகிக்க முடியாமல் போகலாம். ‘உ’ என்ற தமிழ் உயிர் எழுத்தை எழுதும் போது எழுத்தாணியின் கூர்மையும் ஓலைச்சுவடியின் வலிமையும் தெரிந்து விடும். இதன் காரணமாகவே முதலில் ‘உ’ என்ற எழுத்தை எதையும் எழுதுவதற்கு முன்னர் தொடக்கத்தில் எழுதி வந்தர் நம் முன்னோர் என்று கூறப்படுகிறது. 

ஆன்மிக கருத்து..

‘உ’ என்ற எழுத்தை பிள்ளையார் சுழி என்று அழைப்பதற்கு ஆன்மிக கருத்துகளும் பல உள்ளன. தமிழ் கடவுளான விநாயக பெருமாள், பல காரியங்களை தொடங்குவதற்கு முன்பு வணங்கப்படும் முதன்மை கடவுளாக இருக்கிறார். சுற்றுலாவுக்காக வெளியூர் செல்பவர்கள், புதிதாக தொழில் தொடங்குபவர்கள், திருமண வாழ்கையில் இணைபவர்கள் என பலரும் விரும்பு வணங்கும் கடவுளாக இருக்கிறார், விநாயக பெருமான். இவரை வணங்கினால், தடைகள் விலகி வெற்றிக்கு வழி பிறக்கும் என்றும் பலரால் நம்பப்படுகிறது. இதனால், ‘உ’ என்ற எழுத்தை பிள்ளையார் சுழி என்று அழைப்பதாக கூறப்படுவதுண்டு. இது மட்டுமன்றி தன்னுடைய தாய், தந்தையான உமையாள், உமையவனை துணையாகவும் முதன்மையாகவும் கொண்டிருக்கும் வகையில் சுருக்கமாக ‘உ’ என்ற எழுத்தை உருவாகியதாக கூறப்படுகிறது. இதுவும் பிள்ளையார் சுழி பெயருக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர்: ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

‘உ’ என்ற எழுத்து சிறிய வட்டத்தில் தொடங்குகிறது. வட்டத்திற்கு தொடக்கமும் இல்லை, முடிவும் இல்லை. கடவுள் என்பவர், தொடக்கமும் முடிவும் இல்லாதவர் என்பதை பிள்ளையார் சுழி குறிப்பதாகவும் இதனால் ‘உ’ என்ற எழுத்தை கடவுளின் குறியீடாக பார்ப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். மேலும், ‘உ’ என்ற எழுத்தில் வட்டத்தை தொடர்ந்து வரும் கோடு, வளைந்து பின்னர் நேராக செல்கிறது. இதை ‘ஆர்ஜவம்’ என்று கூறுவதுண்டு. இதற்கு ‘நேர்மை’ என்று பொருள். “வாழ்க்கையில் வளைந்து கொடு, அதே சமயம் நேர்மையை கைவிடாதே” என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் பிள்ளையார் சுழி இருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதனால், எதை தொடங்குவதற்கு முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குபவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | விநாயக சதுர்த்தி 2023: தேதி மற்றும் உகந்த நேரம்? விரதமுறைகள் முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News