தைப்பூசம் 2023: விரதம் இருப்பது எப்படி? வழிபாட்டிற்கான சரியான நேரம் எது?

Thaipusam 2023: தை மாதத்தில்தான் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும். அன்றைய தினமே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. தைப்பூசம் தினத்தில் தான் இந்த அகிலம் தோன்றியதாக ஒரு ஐதீகம் உள்ளது. இந்த நன்னாளானது முருகனுக்கு உகந்த நாளாகும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 5, 2023, 11:20 AM IST
  • உலக முழுவதும் தைப்பூசம் கொண்டாடம் எப்படி.
  • முருகப் பெருமானை கொண்டாடப்படும் தைப்பூசம் இன்று.
  • தைப்பூசம் தோன்றிய வரலாறு.
தைப்பூசம் 2023: விரதம் இருப்பது எப்படி? வழிபாட்டிற்கான சரியான நேரம் எது? title=

தைப்பூசம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். அந்த வகையில் இந்த ஆண்டு இன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. தைப்பூசத்தன்று முருகப்பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.

தைப்பூசம் வரலாறு
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல் வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர். கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின.

மேலும் படிக்க | தைப்பூசத்தில் பழனியில் குவிந்த பக்தர்கள்: கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்

கார்த்திகைப் பெண்களால், அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்தவரே கந்தன் எனப்படும் முருகனாவார். சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான். 

அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான். தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூரில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி அடையச் செய்தவர் முருக கடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால், தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.

மலேசியா-ல் களைகட்டிய தைப்பூச திருவிழா.. அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

தைப்பூசத்தின் சிறப்புகள்

* தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.

* சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.

* தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் என்பர்.

தைப்பூச விரத முறை
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிபடுவர். முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு வழங்ககப்படும். அத்துடன் காலை மதியம் என இருவேளையும் பால், பழம் மட்டுமே அருந்தி விரதம் இருந்து மாலையில் முருகன் கோயிலிற்கு சென்று வழிபடுவது சிறந்தது. முருக பக்தர்கள் பலர் தைப்பூச விரதத்தை 48 நாட்கள் இருப்பது வழக்கம். மார்கழி மாதத்தில் தொடங்கி தைப்பூசம் வரை விரதம் இருப்பது வழக்கம். 

உலக முழுவதும் தைப்பூசம் கொண்டாடம் எப்படி

பழனியில் தைப்பூசம்
பழனி முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் ஒரு மலைக் கோவிலாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி. இக்கோவிலில் தைப்பூசம் பத்து நாட்கள் நடைபெறும். ஏழாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெறும். முருகன் தன் இரு துணைவியரான வள்ளி மற்றும் தெய்வயானையுடன் திருமணக்கோலத்தில் ரதவீதிகளில் தேரில் பவனி வருவார். பத்தாம் நாள் தெப்போற்சவம் நடைபெறுவது இங்கு ஐதீகம். இங்கு பக்தர்கள் பலநாட்கள் விரதமிருந்து காவடி எடுப்பது வழக்கம். காவடி எடுப்பவர்கள் வரும் வழிகளில் பாடும் பாடல்கள் காவடிசிந்து என்று அழைக்கப்படுகின்றன. 

வடலூரில் தைப்பூசம்
கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதிகாலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறும். வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்கள். காரணம் தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

மலேசியாவில் தைப்பூசம்

* பத்துமலை முருகன் கோவில்
மலேசியாவில் பத்து மலை முருகன் கோவில் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது.

தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழா கொரோனா கட்டுப்பாடுகளுடன்

மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்துமலையில் குவிவர். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையில் தொடங்கி ஊர்வலமாக நடந்து வருவார்கள். 

இதற்கு எட்டு மணி நேரமாகும். நேர்த்திக்கடன் செலுத்த சிலர் காவடி எடுத்து வருகிறார்கள். அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவோர் உண்டு. சுங்கை பத்து ஆற்றில் நீராடிவிட்டு, மலைக்கோவிலுக்கு 272 படிகள் ஏறி வருவது ஐதீகம்.

* பினாங்கு தைப்பூசம்
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்றுநாள் நடைபெறும். தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.

* ஈப்போ ஸ்ரீ சுப்பிரமணியன் கோவில்
மலேசியாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

Thaipusam 2022: பழனி முருகன் கோயில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது

சிங்கப்பூரில் தைப்பூசம்
சிங்கப்பூரில் தைப்பூசம் மிகச்சிறப்பாககொண்டாடப்படும் விழாவாகும். தைப்பூசத்திற்கு முதல் நாளில் இருந்தே விழா களைகட்டும். சிங்கப்பூர் முருகன் கோவிலில் வேல் தான் மூலவர். இவருக்கு பாலாபிஷேகம் நீண்ட நேரம் நடக்கும். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில் லயன் சித்தி விநாயகர் கோவில் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மாலை தேர் திரும்ப முருகன் கோவிலை வந்தடையும். பக்தர்கள் காவடி எடுப்பார்கள். மற்றவர் பெருந்திரளாக தேரினை இழுத்துச் செல்கிறார்கள். அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துவோர் பூசத்தன்று தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். சீனர்கள் கூட முருகனுக்கு வேண்டுதல்கள் செய்து பூசத்தன்று நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

மொரீஷியசில் தைப்பூசம்
சுப்பிரமணியருக்கு மொரீஷியசில் தைப்பூசத் திருவிழா எடுக்கிறார்கள். காவடி எடுப்பது ஒரு வழக்கமான நிகழ்வு. அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் இங்கும் உண்டு.

ஆஸ்திரேலியாவில் தைப்பூசம்
இலக்கம் 52, பவுண்டரி ரோடு, கெண்டம் டௌன்ஸ், விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் இந்து கழகத்தின் சார்பில் தைப்பூசம் விழா நடைபெறுவது உண்டு. சுப்பிரமணியனுக்கு அபிஷேகம், தேரோட்டம் எல்லாம் தைப்பூசத்தன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகள். பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள்.

மேலும் படிக்க | பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்..! ஆன்லைன் மூலம் பிரசாதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News