அரையிறுதியில் மழை குறுக்கீட்டால் இந்தியா இறுதிச்சுற்றுக்கு செல்லும்.. எப்படி?

இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்ய வேண்டும

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Jul 8, 2019, 01:24 PM IST
அரையிறுதியில் மழை குறுக்கீட்டால் இந்தியா இறுதிச்சுற்றுக்கு செல்லும்.. எப்படி?

மான்செஸ்டர்: உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ராபின் சுற்றுகள் முடிவடைந்து 4 அணிகள் அரையிறுதிக்கு நுழைந்துவிட்டன. 15 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 14 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய அணி இரண்டாம் இடத்திலும், 12 புலிகளுடன் இங்கிலாந்தின் மூன்றாம் இடத்திலும் மற்றும் 11 புள்ளிகள் பெற்று ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

முதல் அரையிறுதி போட்டி வருகிற 9 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மான்செஸ்டரில் நடைபெற இருக்கிறது. அதில் முதல் இடத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. அதைத் தொடர்ந்து 11 ஆம் தேதி இரண்டாவது அரையிறுதி போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் மோதுகின்றன.

லீக் சுற்றில் இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டதால், இந்த இரு அணிகளும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மோதுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல நாளை நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் மழை பெய்தால், இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதற்கு நாளை மற்றும் நாளை மறுநாள் தொடர்ந்து 2 நாட்கள் மழை பெய்ய வேண்டும்.

மான்செஸ்டரில் ஜூலை 9 ஆம் தேதி வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை நாளை மழை பெய்தால் ஆட்டம் கைவிடப்படுமா? இல்லை. ஏனென்றால், லீக் ஆட்டம் போல அரையிறுதி மற்றும் இறுதிபோட்டிகளின் போது மழை குறுக்கீட்டால், அந்த போட்டி அடுத்த நாள் நடத்தப்படும். அதற்காக ஒரு நாள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

அதாவது முதல் அரையிறுதி போட்டி நடக்கவுள்ள ஜூலை 9 ஆம் தேதி 9 அன்று மழையின் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆட்டம் நிறுத்தப்பட்டால், அடுத்த நாள் (ஜூலை 10) நடத்தப்படும். 

ஜூலை 10 ஆம் தேதி அன்றும் மழை பெய்து போட்டி நிறுத்தப்பட்டால், இரு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்படும். அப்படி பார்த்தால், புள்ளிப்பட்டியலில் இந்தியா 15 புள்ளிகளோடு இருப்பதால் நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறும். நியூசிலாந்து 11 புள்ளிகள் பெற்று 4வது இடத்தில் உள்ளதால், அரையிறுதியில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்ப்படும்.