இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த் 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பிசிசிஐ அவருக்கு ஆயுள்காலத் தடை விதித்தது.
இந்த வழக்கை விசாரித்த வந்த டெல்லி அமர்வு நீதிமன்றம், ஸ்ரீசாந்த் மீதான குற்றச்சாற்றுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்தது. அதன் பின்னரும் அவரின் மீதான ஆயுள்காலத் தடையை பிசிசிஐ நீக்கவில்லை.
இதனையடுத்து, பிசிசிஐ-யின் ஆயுள்காலத் தடைக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பிசிசிஐ-யின் ஆயுள்காலத் தடை நீக்கி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து பிசிசிஐ தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீடு மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட பிசிசிஐ-யின் வாழ்நாள் தடை தொடரும் என உறுதி செய்தது.
கேரள உயர் நீதிமன்றத்திம் உத்தரவை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஸ்ரீசாந்த். இன்று இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்ரீசாந்தின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்க கோரி பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.