வெலிங்டன்: இன்றைய நான்காவது போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்று, தொடரை 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இன்னும் ஒரு போட்டி தான் எஞ்சியுள்ளது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதின் முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று நான்காவது டி-20 போட்டி வில்லிங்டண் ஸ்கை மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து, இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.
இந்திய அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இந்திய வீரர் மனிஷ் பாண்டே (Manish Pandey) அரை சதம் அடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். அவர் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அடுத்த நிலையில் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் 39(26) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால், இந்திய அணி வெறும் 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதேவேளையில் தொடரை வென்ற இந்திய வீரர்கள் ரோகித், மொகமது ஷமி மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், இவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் இன்று களம் இறக்கப்பட்டனர்.
அதேபோல இந்தத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மூன்றாவது டி20 போட்டியின் போது பீல்டிங் செய்யும் போது ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை குறிப்பிடத்தக்கது.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி, அந்த அணியின் தொடக்க வீரர்கொலின் மன்ரோ (Colin Munro) அதிரடியாக விளையாடி 64(47) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார். அதேபோல டிம் சீஃபர் (Tim Seifer) நிதானமாகவும், அதிரடியாகவும் ஆடி அணியை வெற்றியின் பக்கத்தில் அழைத்து சென்றார். அவர் 57(39) ரன்கள் எடுத்து நிலையில் அவரும் ரன்-அவுட் ஆனார்.
கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் விக்கெட். இரண்டாவது பந்தில் நான்கு ரன்கள், மூன்றாவது பந்தில் விக்கெட், நான்காவது பந்தில் ஒரு ரன், ஐந்தாவது பந்தில் விக்கெட், ஆறாவது பந்தில் ஒரு ரன்னும், ஒரு விக்கெட்டும் (ரன்-அவுட்) எடுக்கப்பட்டது. இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஆட்டம் "டை" ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதில் முதலில் ஆடிய நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்புக்கு ஆறு பந்தில் 13 ரன்கள் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 5 பந்தில் வெற்றியை தன்வசம் ஆக்கியது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நான்கு போட்டிகள் முடித்துள்ள நிலையில், இந்தியா 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.