திணறிய வெஸ்ட் இண்டீஸ்... கெத்து காட்டிய 'கத்துக்குட்டி' - இன்றைய போட்டிகள் யார் யாருக்கு?

ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ஜூன் 3ஆம் தேதி நடைபெறும் போட்டிகள் குறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 3, 2024, 08:02 AM IST
  • அமெரிக்கா முதல் போட்டியில் கனடாவை வீழ்த்தியது.
  • பப்புவா நியூ கினியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை திணறடித்தது.
  • வெஸ்ட் இண்டீஸ் கடைசி கட்டத்தில் போராடி வென்றது.
திணறிய வெஸ்ட் இண்டீஸ்... கெத்து காட்டிய 'கத்துக்குட்டி' - இன்றைய போட்டிகள் யார் யாருக்கு? title=

ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 2) தொடங்கியது. இருப்பினும், அந்த போட்டி அமெரிக்காவின் டல்லஸ் நகரில் ஜூன் 1ஆம் தேதி அன்று இரவே நடந்தது. குரூப் ஏ-வில் இடம்பெற்ற அமெரிக்கா - கனடா மோதிய அந்த போட்டி இந்தியாவில் நேற்று காலை 6 மணியளவில் நேரலையாக ஒளிப்பரப்பட்டது. இந்த போட்டியில் அமெரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கனடாவை வீழ்த்தியது.

தொடர்ந்து தொடரை நடத்தும் மற்றொரு அணியான மேற்கு இந்திய தீவுகள், கத்துக்குட்டி அணியாக பார்க்கப்படும் பப்புவா நியூ கினியா அணியை எதிர்கொண்டது. இரு அணிகளும் குரூப் சி-இல் இடம்பெற்றுள்ளன. மேற்கு இந்திய தீவுகளின் கயானா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும், உள்ளூர் நேரப்படி காலை 10. 30 மணிக்கும் இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

பவர்பிளேவில்...

பப்புவா நியூ கினியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்களை அடித்தது. இந்த எளிய இலக்கை துரத்தினாலும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் மிகவும் சொதப்பினர். ஓப்பனர் ஜான்சன் சார்லஸ் 0 (1) மட்டும் பவர்பிளேவில் அவுட்டானார். பவர்பிளே முடிவில் 52 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதற்கு பின்னர்தான் மேற்கு இந்திய தீவுகளுக்கு பிரச்னையே வர ஆரம்பித்தது. பெரிய மைதானம், ஆடுகளத்தின் தன்மை, மெதுவான பந்துவீச்சு என அனைத்து அம்சங்களையும் கச்சிதமாக பயன்படுத்தி, பப்புவா நியூ கினியா பௌலர்கள், மேற்கு இந்திய தீவுகள் பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர்.

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை: இந்த முறை கப் இந்திய அணிக்குதான்... ஏன் தெரியுமா?

பவர்பிளேவுக்கு பின்...

பவர்பிளேவுக்கு பின் நிக்கோலஸ் பூரன் 27 (27), பிராண்டன் கிங் 34 (29), ரோவ்மேன் பாவெல் 15 (14), ரூதர்ஃபோர்ட் 2 (7) என சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். மறுபுறம் ரன்களும் பெரிதாக அடிக்கப்படவில்லை. ரூதர்ஃபோர்ட் ஆட்டமிழக்கும் போது 16ஆவது ஓவர் நிறைவடைந்திருந்தது. பவர்பிளேவுக்கு பின்னான 10 ஓவர்களில் மேற்கு இந்திய தீவுகள் 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்களையே அடித்திருந்தது.

போராடி வெற்றி

கடைசி 4 ஓவர்களில் அதாவது 24 பந்துகளில் 41 ரன்கள் தேவைப்பட்டது. ரோஸ்டன் சேஸ் மர்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் பொறுப்புடன் விளையாடி 19ஆவது ஓவரிலேயே இலக்கை அடைந்து தங்களின் வெற்றியை உறுதி செய்தது. சேஸ் 42 (27) ரன்களுடனும், ரஸ்ஸல் 15 (9) ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இரு்நதனர். பப்புவா நியூ கினியா பந்துவீச்சில் அவர்களின் கேப்டன் அஸ்ஸாத் வாலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர், 1 மெய்டன் அடக்கம். குறிப்பாக, இடது கை சுழற்பந்துவீச்சாளரான ஜான் கரிகோ 4 ஓவர்களில் 1 விக்கெட்டை வீழ்த்தி 17 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார்.

காத்திருக்கும் அதிர்ச்சிகள்...

இப்படி முதல் இரண்டு போட்டிகளே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுள்ளதால் நடப்பு டி20 உலகக் கோப்பை மீதான எதிர்பார்ப்பும் எகிறியிருக்கிறது. எந்த கத்துக்குட்டி அணி வேண்டுமானாலும், எந்தவொரு பலமான அணியையும் வீழ்த்திவிடலாம் என்ற கூறப்படுகிறது. தற்போது குரூப் சுற்றில் மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பி-இல் இடம்பெற்றுள்ள நமீபியா - ஓமன் அணிகள் இதில் மோதுகின்றன.

ஆதிக்கம் செலுத்தும் நமீபியா...!

பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன் 3) காலை 6 மணிக்கு தொடங்கியது. இருப்பினும், மேற்கு இந்திய தீவுகளின் உள்ளூர் நேரப்படி ஜூன் 2ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓமன் 109 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. நமீபியா பந்துவீச்சில் ரூபன் ட்ரம்பெல்மேன் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். நமிபியா பேட்டிங் செய்து வருகிறது.

அடுத்தடுத்த போட்டிகள்...

தொடர்ந்து, குரூப் டி-இல் இடம்பெற்றுள்ள இலங்கை - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன் 3) இரவு 8 மணிக்கு ஒளிப்பரப்பாகும். போட்டி நடைபெறும் நியூயார்க்கில் அது ஜூன் 2ஆம் தேதி காலை 10.30 மணியாகும். தொடர்ந்து குரூப் சி-இல் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் - உகாண்டா போட்டி இந்திய நேரப்படி நாளை (ஜூலை 4) காலை 6 மணிக்கு தொடங்கும். போட்டி டைபெறும் கயானாவில் அது ஜூன் 3ஆம் தேதி இரவு 8.30 மணியாகும்.

மேலும் படிக்க | 'தோனியிடம் டெக்னிக் இல்லை...?' நிதிஷ் ரெட்டி போட்ட குண்டால் சர்ச்சை - முழு விவரம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News