Tamil Nadu Political Latest News Updates: தற்போதெல்லாம் தேர்தலை கட்சிகள் தங்களின் வியூகம், திட்டம், நோக்கத்தின் அடிப்படையில் சந்திப்பதை காட்டிலும் அரசியல் வியூகங்களை வகுத்துதரும் சில நிறுவனங்களுடன் இணைந்துதான் களம் காண்கின்றன. குறிப்பாக, 2014ஆம் ஆண்டில் மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமராக தேர்வானபோது, நாடு முழுவதும் பெரும் கவனத்தை பெற்றவர், பிரஷாந்த் கிஷோர்.
பிரஷாந்த் கிஷோரின் I-PAC எனும் அரசியல் வியூக வகுக்கும் நிறுவனமே பிரதமர் மோடியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்டதாக சொல்லப்பட்டது. பாஜகவின் பிரச்சார யுத்தி முதல் மோடியின் பேச்சு, உடை வரை என A டூ Z அனைத்தையும் இந்த நிறுவனமே முடிவு செய்து வியூகம் வகுத்து கொடுத்ததாக கூறப்பட்டது. தேசிய அரசியலில் மட்டுமின்றி இது அடுத்தடுத்து மாநில அரசியலிலும் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
திமுகவின் தேர்தல் வியூகம்
2021ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு I-PAC நிறுவனத்துடன்தான் திமுகவும் கைக்கோர்த்தது. 2020ஆம் ஆண்டிலேயே திமுகவும், I-PAC நிறுவனமும் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு தேர்தலை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றது. 2021 தேர்தலில் திமுக முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலினின் நடை, உடை, கெட்-அப் என அனைத்தும் புதுப்பொலிவு பெற்றது. 'ஸ்டாலின் தான் வராரு... விடியல் தர போறாரு...' போன்ற பிரச்சாரங்களும் பெரிதும் கவனத்தை ஈர்த்தன.
மேலும் படிக்க | மகளிர் உரிமை தொகையில் உயர்வு? பட்ஜெட்டில் வரவிருக்கும் மாஸான அறிவிப்பு?
அப்படியிருக்க, தற்போதே 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு பலரும் காத்திருக்கின்றனர். மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக கூட்டணி பலமான ஒன்றாக காட்சியளித்தாலும் பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
2026 சட்டப்பேரவை தேர்தல் களம்
திமுக தற்போது துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தியிருக்கும் நிலையில், 2026ஆம் ஆண்டில் அவரே முதல்வர் வேட்பாளராகவும் இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 200 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என திமுகவும் இப்போதே சட்டப்பேரவை தேர்தலுக்கு பல்வேறு வேலைகளை களத்தில் தொடங்கியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதுபோக, அதிமுக - பாஜக கூட்டணி முறிவு, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என தமிழ்நாட்டு சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்படலாம் என எதிர்பார்ப்பும் இருக்கிறது. எனவே, திமுகவுக்கு வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் பல சாதகங்களும், பாதகங்களும் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
திமுக - Showtime Consultancy ஒப்பந்தம்??
இந்நிலையில், வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் Showtime Consultancy நிறுவனத்துடன் திமுக கையெழுத்திட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரஷாந்த் கிஷோரின் I-PAC நிறுவனத்தில் இயக்குநராக இருந்த ராபின் சர்மா என்பவரின் நிறுவனம்தான் இந்த Showtime Consultancy.
இந்தாண்டு மக்களவை தேர்தலுடன் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்க, உறதுணையாக இருந்தது இந்த Showtime Consultancy நிறுவனம்தான். அதாவது, Showtime Consultancy ஆதரவுடனான சந்திரபாபு நாயுடு, I-PAC ஆதரவுடனான ஜெகன்மோகன் ரெட்டியை வீழ்த்தினார் எனலாம்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் அதிமுக I-PAC உடன் கைக்கோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது திமுக Showtime Consultancy உடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதன் மூலம் தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
மேலும் படிக்க | இனிமே No பேச்சு Only வீச்சு தான்..! களத்தில் குதித்த விஜய்..! மிரளும் அரசியல் களம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ