மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்துபோட்டியின் இறுதி ஆட்டத்தில், அமெரிக்கா அபார வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது!
ஃபிரான்சில் மகளிருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தன. இறுதிப் போட்டியில், அமெரிக்காவும், நெதர்லாந்தும் மோதின. லியோனில் நடைபெற்ற இந்தப் போட்டியின், முதல் பாதி வரை இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போனது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியபோது, அமெரிக்காவின் மேகன் ரபினோ (megan rapinoe) பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, கோல் அடித்தார். இந்த கோல் அடிக்கப்பட்ட 8-வது நிமிடத்தில், அமெரிக்க வீராங்கனை ரோஸ் லவேல் (rose Lavelle) அடுத்த கோலை அடித்தார். இதனையடுத்து, அமெரிக்கா 2-0 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டநேர முடிவில் நெதர்லாந்து அணி ஒரு கோல் கூட போடமுடியாமல் போனது. இதையடுத்து, அமெரிக்கா 2-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று, மகளிர் உலகக் கோப்பையை வென்றது. இதனால், அமெரிக்க கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது அமெரிக்காவின் 4 வது உலகக் கோப்பையாகும். அமெரிக்கா, கடந்த 1991, 1999, 2015 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தகுந்தது.