புதுடெல்லி: புனேவில் நடைப்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இன்றைய நான்காம் நாளில் பாலோ-ஆன் கொடுக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி 326 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது. இந்திய பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. தென் ஆப்ரிக்கா வீரர்களில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அப்படி என்றால் இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதல் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். 67.2 ஓவருக்கு 189 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 137 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை இந்திய அணியின் வீரர்கள் கொண்டாடும் காணொளியை காணுங்கள்....!!
That will be it. #TeamIndia win the 2nd Test by an innings & 137 runs. 2-0 #INDvSA @Paytm pic.twitter.com/pt3PPffdQt
— BCCI (@BCCI) October 13, 2019
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பூனே மைதானத்தில் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. மயங்க் அகர்வால் (108) ரன்களும், அணித்தலைவர் விராட் கோலியின் 254 ரன்கள் உதவியுடன் இந்திய 5 விக்கெட் இழப்பிற்கு 601 ரன்கள் குவித்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை டிக்ளர் செய்தது.
இதனைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென்னாப்பிரிக்கா ஆரம்பம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியாவை விட 326 ரன்கள் பின்தங்கியது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு பாலோ-ஆன் தரப்பட்டதால், இன்று தனது இரண்டாவது இன்னிங்சை ஆடியது.
இன்று காலை முதலே இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறியது. 67.2 ஓவருக்கு 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியை அடுத்து, இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் தலைமையிலான அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.