போராட்டகாரர்களை சமாதானப் படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகுந்த கண்டனத்திற்குரியது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வற்புறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் அப்பகுதி மக்களால் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 100 நாட்களாக மக்கள் போராடி வந்தாலும் தமிழக அரசு முறையான நடவடிக்கையை எடுக்காததால் இன்று போராட்டம் பெரிய அளவில் நடைபெற்றிருக்கிறது. ஏற்கனவே போராட்டம் பற்றி முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 144 தடை உத்தரவு அரசு பிறப்பித்துள்ள நிலையில் போராட்டத்தை தடுத்திடவோ, போராட்டகாரர்களை சமாதானப் படுத்திடவோ அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் போராட்டத்தின் போது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சுமார் 10 பேர் கொல்லப்பட்டும், பல பேர் படுகாயத்திற்கு ஆளாகியும், தடியடியும், கண்ணீர் புகையில் பல பேர் பாதிக்கப்பட்டு போராட்ட இடம் போர்க்களமாக மாறி உள்ளது.
வானத்தை நோக்கி சுட்டு முன்னெச்சரிக்கை செய்யாமலும், கீழ்நோக்கி சுடாமலும் நெஞ்சில் சுட்டு பலர் இறந்திருப்பதாக தகவல்கள் வருவது வேதனைக்குரியது. காவல்துறையினரின் இத்துப்பாக்கிச் சூடு மிகுந்த கண்டனத்திற்குரியது.
இக்கலவரத்தின் போது காவல்துறையினர் சிலரும் தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். பொதுவாக மக்கள் போராட்டங்களை முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கை எடுத்தோ, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே மக்களால் தேந்தெடுக்கப்பட்ட அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, காவல்துறையை வைத்துக் கொண்டு தடியடி நடத்துவது துப்பாக்கிச் சூடு நடத்தி பொதுமக்களை கொல்வது ஒரு அரசின் பாசிச போக்கையே காட்டுகிறது. ஜனநாயக நாட்டில் மக்கள் போராடத் தான் செய்வார்கள். துப்பாக்கிச் சூடு மூலம் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாது. இது ஜனநாயக விரோதச் செயலாகும்.
போராட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடவும், பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியின் மூலம் உரிய நீதி விசாரணை உடனே மேற்கொள்ளப்பட வேண்டும். காயமுற்றவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்வதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சு. திருநாவுக்கரசர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.