திருச்சி: 19 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி. ஆனால் குழந்தையிடம் இருந்து எந்தவித அசையும் தெரியவில்லை என்றும், அவரின் மூச்சை கண்டறியவதில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்றும் கூறப்பட்டு உள்ளது. 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்பு சவாலாக உள்ளது, தற்போது மழை பெய்து வருவதால், மேலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் வந்துள்ளனர். அனைவரும் ஒன்றாக சேர்ந்து எப்படியாவது குழந்தையை மீட்க வேண்டும் என அதிநவீன கருவிகளுடன் போராடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு 2 வயது குழந்தை சுஜித் விழுந்தது, அப்பொழுது முதல் தற்போது வரை 19 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்பு படையினர், சிறப்பு குழு, கோவையை சேர்ந்த மீட்பு குழு மற்றும் தமிழக காவல்துறை கடும் முயற்சி செய்து வருகின்றனர். பொது மக்களும் ஆதரவு அளித்து வருகின்றனர். சுஜித்தை பத்திரமாக உயிருடன் மீட்க வேண்டும் என அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.
தற்போது ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தையிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால், அனைவரையும் கலங்கச் செய்துள்ளது. குழந்தை ஒருவேளை மயக்கம் அடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. குழந்தையை மீட்டவுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.