மேல்மருவத்தூர் அருகே உள்ளது கீழாமூர் கிராமம். இங்கு ஏராளமானதெரு நாய்கள் இருந்தன. இந்த நிலையில் கடந்த வாரம் கிராமத்தில் ஒதுக்குபுறமான இடம் மற்றும் வயல்வெளி பகுதியில் ஏராளமான நாய்கள் எரிந்த நிலையில் கொல்லப்பட்டு கிடந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிலர் பிராணிகள் நல ஆர்வலர் அஸ்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவரது தலைமையிலான குழுவினர் கீழாமூர் கிராமத்துக்கு வந்து பார்வையிட்டனர் அவர்கள் எரித்து கொல்லப்பட்ட நாய்களின் உடல்களை மீட்டு கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் தகனம் செய்தனர். இது குறித்து மேல்மருவத்தூர் காவல்துறையிடம் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடந்த சிலமாதங்களில் மட்டும் கீழாமூர் கிராமத்தில் 40-க்கும் மேற்பட்ட ஆடுகளை தெரு நாய்கள் கடித்து கொன்று இருப்பது தெரிந்தது. இதனால் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் தம்பிகளான முத்து, முருகதாஸ் உள்பட 4 பேர் அதிக அளவு பாதிக்கப்பட்டனர். ஆடுகளை இழந்த அவர்கள் பழிக்கு பழியாக 50-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து உயிரோடு எரித்து கொன்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து முத்து, முருகதாசை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
கொல்லப்பட்ட பல நாய்களுக்கு விஷமும் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த நாய்களின் உடல்களை தின்ற காகம், பூனையும் அதிக அளவு கீழாமூர் கிராமத்தில் இறந்து இருக்கிறது.
இது குறித்து பிராணிகள் நல ஆர்வலர் அஸ்வத் கூறும் போது: கீழாமூர் கிராமத்தில் ஆடுகளை நாய்கள் கடித்து உள்ளன. அதற்கு பழிவாங்கும் படலமாக நாய்களுக்கு உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்து பிடித்து இருக்கிறார்கள். “மயங்கிய அந்த நாய்கள் மீது மண்எண்ணை ஊற்றி உயிரோடு எரித்து கொன்று உள்ளனர். இது தொடர்பாக மேல்மருவத்தூர் போலீசில் புகார் செய்து உள்ளோம்” என்றார்.
ஆடுகளை இழந்த கோபத்தில் பழிவாங்குவதற்காக 50 நாய்கள் உயிரோடு எரிக்கப்பட்ட சம்பவம் பிராணிகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.