இந்த ஆண்டு முதல் இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2017–2018–ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் சி.பி.எஸ்.இ. நடத்தும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது.
இதனால், தமிழக மாணவர்களுக்கு ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற தமிழக அரசு பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. அதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, இந்தியா முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. 104 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 1,900–க்கும் அதிகமான மையங்களில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் 11 லட்சத்துக்கும் அதிகமான பேர் இந்த தேர்வை எழுதினர்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் ஆகிய 8 நகரங்களில் அமைக்கப்பட்டு இருந்த 57 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மேலும் சென்னையில் பல்லவன் சாலையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளிட்ட 13 மையங்களில் தேர்வு நடந்தது.
தமிழகத்தில் நீட் தேர்வை எழுத 90 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் பலர் தேர்வு எழுத வரவில்லை. சுமார் 8500 பேர் தேர்வு எழுதினர். காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.
தீவிர சோதனைக்கு பின்னரே மாணவ–மாணவிகள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
நீட் தேர்வுக்கான விதிமுறைகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. தேர்வு எழுத வருபவர்கள் கைக்கெடிகாரம், பெல்ட், கம்மல், மூக்குத்தி கொலுசு போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.
முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்கள் அவற்றை கழற்றி கைப்பகுதியை கத்தரிக்கோலால் வெட்டி, அரைக்கை சட்டையாக மாற்றி அணிந்து கொண்டு உள்ளே சென்றார்கள்.
நீட் தேர்வு முடிவு ஜூன் மாதம் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்வு முடிவை www.cbse.neet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.