புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சியில், கி.பி.9 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 11. ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறைக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. குளத்தூர் தாலுகா கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி கிராமத்தில், ஆசிரியர் கண்ணதாசன் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரை பாண்டியநாட்டு பண்பாட்டு மையத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் முனைவர். து.முனீஸ்வரன், முனைவர் சி.செல்லபாண்டியன் அவர்களின் தலைமையில், கீரனூரைச் சேர்ந்த, பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் ஆய்வாளர்களுமான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் கொண்ட குழு களஆய்வு மேற்கொண்டதில், ஒரே பாறையின் மேற்பரப்பில் இரண்டு கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது.
இக்கல்வெட்டை மை படியெடுத்து ஆய்வுசெய்தப் போது, இவை கி.பி 9 மற்றும் கி.பி 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.
இக்கல்வெட்டை படியெடுத்து, அய்வு செய்த தொல்லியல் கள ஆய்வாளர் முனைவர் து முனீஸ்வரன் கூறியதாவது :
தமிழரின் தொன்மையை பறைச் சாற்றுக்கின்ற பொற்பனைக்கோட்டையில் முதல் கட்ட அகழ்வியல் பல வரலாற்று தடயங்கள் கண்டறியப்பட்டு ஆய்வு செய்து வருகின்றன. இந்நிலையில் கீரனூர் அருகே வத்தனாக்குறிச்சி பகுதியில் தனிப்பாறையில் 2 அடி நீளம் 2 அடி அகலம் 5 வரி கொண்ட ஒரு கல்வெட்டில் "ஸ்ரீ இடைத்தி சாத்தங் குருன்தி சுனை இயிது" "அழியாதி" என பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டு கி.பி. 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை கல்வெட்டின் செய்தி படி அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு நீர் ஆதாரத்திற்காக, சாத்தங் குருன்தி என்ற மன்னன், பாறையின் மேல் சுனையைக் குடைந்து, அச்சுனையை, மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு, தண்ணீர் பயன்பாட்டிற்காக அளித்தமையை குறிக்கிறது. கல்வெட்டின், ஐந்தாம் வரி முற்றிலும் சிதிலமடைந்துள்ளது.
ALSO READ:கொடுமணல் அகழாய்வு காட்சிப்படுத்தப்படும் அமைச்சர் சாமிநாதன்
அகநானூற்றில் களிற்றியானை நிரையில், 8 இடங்களில் சுனைகள் பற்றிய செய்திகளில், சுனைகள்,வளத்தை உணர்த்துவதாகவும், வறுமையை உணர்த்துவதாகவும், பெரும்பாலான இடங்களில் கூறப்பட்டுள்ளது.
இதன் அருகே காணப்படும் மற்றொரு கல்வெட்டில் 6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்ட , 8 வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.பி 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை .பெரும்பாலான எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளதால், கல்வெட்டின் பொருளை அறிந்துக்கொள்ள முடியவில்லை.
இப்பாறைக் கல்வெட்டுகள், கிடைமட்டமாக பொறிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மற்றும் கால்நடைகள் நடமாட்டத்தால் எழுத்துக்கள் முற்றிலுமாக அழிந்து போகும் நிலையில் உள்ளது. மேலும், இப்பாறைக் கல்வெட்டுகளின், வடபுறம் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட ஈமக் காடுகளும் உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், பல ஆண்டுகளுக்குப்பின் பாறைக்கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுனையை தானமாக அளித்த கல்வெட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில், வேறெங்கும் கண்டெடுத்ததாக இதுவரை அறியப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன், இக்கல்வெட்டின் அமைவிடம் தெரிந்து, படியெடுத்திருந்தால், பூலாங்குறிச்சி கல்வெட்டினைப் போல் அரிய செய்தி கிடைத்திருக்க வாய்ப்புண்டு.
இப்பாறைக் கல்வெட்டுகளுக்கு, மேற்கூரை அமைத்து சிதிலமடையாமல் தடுத்து, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்கள் .
ALSO READ:1300 ஆண்டு கால பல்லவர் சிலை செஞ்சி அருகே கண்டுபிடிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR