சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த பிறகு, அங்கு போராட்டம் போன்ற எந்த நிகழ்வுக்கும் போலீஸார் அனுமதி வழங்குவதில்லை. அங்கு 24 மணி நேரமும் போலீஸார் கண் காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் 8-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்காகவும் இலங்கை மீது ஐ.நா. நட வடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சில தமிழ் அமைப்புகள் இன்று மாலை மெரினாவில் கூடவுள்ளதாக தகவல் வெளியானது.
மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மே 17-ம் தேதி இயக்கம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல் வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டம் நடத்தவும் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், போலீஸார் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து மெரினா, பெசன்ட் நகர் கடற்கரையில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி கடற்கரையில் திரண்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.