மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; கிராம மக்களுக்கு எச்சரிக்கை!!

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளதால், வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்க உள்ளதால், சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களை மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 10, 2019, 05:20 PM IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; கிராம மக்களுக்கு எச்சரிக்கை!! title=

சேலம்: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,50,500 கன அடியாக இருக்கும் நிலையில், மேட்டூர் அணைக்கு வந்தடையும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது

தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் கடும் வெள்ளம் ஏற்ப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், அணைகளுக்கு வரும் நீர்வரத்து முழுவதும் பாதுகாப்புக் காரணத்துக்காக காவிரியில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

கபினி அணையில் வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்தும் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. காவிரியில் இதுவரை வரலாறு காணாத வகையில் கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1,50,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

நேற்று வரை காவிரியில் வந்து கொண்டிருந்த நீரின் அளவானது வினாடிக்கு 35,000 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 45,000 கன அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அதிக அளவில் நீர் வெளியேற்றப்படுவதால், இன்று மாலைக்குள் 1 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அதனால் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் நீரின் அளவு அதிகரிக்க உள்ளது. அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Trending News