பொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம் பெண்கள், குடும்ப பெண்கள் என நேரிலும் முகநூலிலும் பழகி நட்பாக ஆசைவலையில் விழவைத்து, நம்பவைத்து ஏமாற்றி தனியாக அழைத்து சென்று அவர்களை அடித்தும் துன்புறுத்தியும் கதறக்கதற பாலியல் வன்கொடுமை செய்து நாசமாக்கி, அந்த சம்பவத்தை காணொளியாக எடுத்து, அதைக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், அவர்களை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்தி உள்ளனர் ஒரு கும்பல். அந்த காணொளி பார்க்கும் போது பாதிக்கப்பட்ட அந்தப் பெண்களின் அலறல் குரலைக் காது கொடுத்துக் கேட்டால் நெஞ்சம் நடுங்குகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் குரல் பலமாக ஒலித்தது.
இதனையடுத்து கொடூர சம்பவத்திற்கு காரணமான 4 குற்றவாளிகளான சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி அமைப்புக்கு மாற்றி உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம்.
இன்று கொடூர சம்பவத்திற்கு யார் முக்கிய காரணம்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ற கோணத்தில் வழக்கு விசாரணையை ஆரம்பித்தது சிபிசிஐடி.
இதுகுறித்து சிபிசிஐடி ஐஜி ஸ்ரீதர் கூறுகையில், முதலில் இந்த சம்பவத்தில் கைதாகி உள்ள நான்கு பேரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்படும். பின்னர் அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். முற்றிலும் நேர்மையான முறையில் விசாரணை மேற்கொள்ளப்படும்.