தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் கூறியுள்ளதாவது... தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், திருவண்ணாமலை, கரூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
ALSO READ | SIP-யின் சிறிய முதலீடு உங்கள் பணத்தை இரட்டிப்பாக்க உதவும்.. எப்படி?
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ. மழை பதிவானது. செப்டம்பர் 2 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மற்றும் நாளை கேரளா, லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் செப்டம்பர் 06 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகின்றனர்.