சென்னை ஆர்கேநகர் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-
ஆர்கேநகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.
ஜெயலலிதா இதற்கு முன்பு பர்கூரிலும், ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார். அவர் முதல் அமைச்சரான பிறகும் அந்த தொகுதிகள் முன்னேற்றம் அடைய வில்லை.
ஜெயலலிதா மறைந்த 3 மாதத்தில் அதிமுக 3 ஆக உடைந்து விட்டது. மேலும் கட்சியின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி பெயரையும் தேர்தல் கமிஷன் முடக்கி விட்டது.
இந்நிலையில் அதிமுக-வில் 3 பிரிவாக ஆர்கேநகரில் போட்டியிடுகிறார்கள். இவர்கள் மக்களுக்காக என்ன செய்துவிட போகிறார்கள். ஒருவர் மீது ஒருவர் வீண் பழிதான் சுமத்துகின்றனர். மக்களை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை.
தமிழ்நாட்டில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 6 மாதத்தில் முதல் அமைச்சர் ஆவது உறுதி. அதற்கு அச்சாரம்தான் ஆர்கேநகர் தொகுதி இடைத்தேர்தல்.
இதில் வெற்றி பெறுவதின் மூலம் திமுக நிலை உயரும். கொள்கை அடிப்படையில் செயல்படும் கட்சி திமுக-வாகும். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் பிரச்சினை களுக்காக நாள்தோறும் போராடுவதால் அதற்கு தீர்வு கிடைக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.