சென்னையின் பிரபல ரவுடி ''நீராவி முருகன்'' நெல்லையில் என்கவுன்டர்!

3 கொலைகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நெல்லையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 16, 2022, 01:31 PM IST
  • சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நீராவி முருகன் நெல்லையில் சுட்டுக்கொலை
  • களக்காடு பகுதியில் பிடிக்கச்சென்ற போலீசார் சுட்டுக்கொன்றதாக தகவல்
  • 3 கொலைகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகன்
சென்னையின் பிரபல ரவுடி ''நீராவி முருகன்'' நெல்லையில் என்கவுன்டர்!  title=

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். தொடக்கத்தில் வழிப்பறி, திருட்டு போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர் பின்னாட்களில் காவல்துறைக்கே சிம்ம சொப்பனமாக மாறியது ஓர் சுவாரஸ்ய கதை. தூத்துக்குடியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த முருகனுக்கும், அதே பகுதியில் பிரபல தாதா ஒயின்ஸ் சங்கருக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஒயின்ஸ் சங்கருக்காக அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற பல காரியங்களை செய்துள்ளார். காலப்போக்கில் முருகனை அவரது ஊர் பெயரை அடையாளப்படுத்தி அழைத்ததால் ''நீராவி முருகன்'' என அவரது பெயர் பிரபலமடைந்தது. 

வழிப்பறி, அடிதடி, கொலை முயற்சி என இருந்த நீராவி முருகன், 1998-ல் தூத்துக்குடி பேருந்து நிலையம் அருகே செல்வராஜ் என்பவரை கொலை செய்தார். திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டபோது நகை, பணத்தை பங்குபோடுவதில் ஏற்பட்ட தகராறில் செல்வராஜை இவர் கொலை செய்ததாக கூறப்படுகிறது. 2011-ம் ஆண்டு தூத்துக்குடியில் நடந்த திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலயில் கூலிப்படையாக மாறினார். அதே ஆண்டில் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்த நீராவி முருகன், குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 

நீராவி முருகனுக்கு சிறைக்குள் ரவுடிகள், தாதாக்கள் என பலரின் நட்புகள் கிடைத்துள்ளன. சாலையில் நடந்துசெல்வோரிடம் வழிப்பறி செய்வதில் நீராவி முருகனுக்கு என்றே தனி ஸ்டைல் இருந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

அதாவது எப்போது வழிப்பறி செய்தாலும் தனியாளாக தன்னந்தனியே துணிச்சலுடன் களத்தில் இறங்கி நகை, பணத்தை சர்வசாதாரணமாக பிடுங்கி செல்வது நீராவி முருகனின் பாணி. ஒரு கட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு மாறிய நீராவி முருகன், அங்கு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். 

இந்த நேரத்தில் எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் நீராவி முருகனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியதால் உயிருக்கு பயந்து 2013-ம் ஆண்டு சென்னையில் பதுங்கினார்.  இங்கு பல இடங்களில் கைவரிசை காட்டிய இவர், காஞ்சிபுரத்தை சேர்ந்த நண்பர் அப்பாத்துரையுடன் சேர்ந்து குற்றச்செயல்களை அரங்கேற்றினார். இவர்கள் இருவரும் சேர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் வழிப்பறி, பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால் சென்னையிலும் நீராவி முருகனின் பெயர் பிரபலமடைந்தது.  

உல்லாச வாழ்க்கைக்காகவே நீராவி முருகன் குற்றச்செயல்களில் ஈடுபட்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. கொள்ளயடித்த பணத்தை துணை நடிகைகளுக்கு தண்ணீராக செலவழித்துள்ளார். மேலும், அன்பளிப்பாக நகைகளையும் கொடுத்து அசத்தியுள்ளார். போலீசாரிடம் இருந்து தப்பித்து தலைமறைவாக இருந்த போதெல்லாம் நீராவி முருகனுக்கு இந்த ஆசை நாயகிகள் தான் அடைக்கலமாக இருந்துள்ளனர். 

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை துரைப்பாக்கத்தில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவரிடம் பட்டப்பகலில் 14 சவரன் செயினை தனியாக இருசக்கர வாகனத்தில் வந்து பறித்துச்சென்றார். இந்த சம்பவத்தை அங்கிருந்த மாணவி ஒருவர் செல்போனில் படம்பிடித்தது போலீசாரிடம் அவன் வசமாக சிக்குவதற்கு காரணமானது. 

இதேபோல் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நீராவி முருகனை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில், நெல்லை மாவட்டம் களக்காடு அருகே பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பகுதிக்கு சென்ற போலீசார், நீராவி முருகனை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து நீராவி முருகன் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Trending News