ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக கட்சியின் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இது தொடர்பான வழக்கினை வரும் அக்., 31-ம் தேதிக்குள் முடிவுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை முன்னதாக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து, இரட்டை இலை சின்னம் தொடர்பான ஆவணங்களை அதிமுக-வின் இரு அணியினரும் கடந்த மாதம் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய அணியினரும், டிடிவி அணியினரும் தங்கள் தரப்பு ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.
அதே வேளையில், தினகரன் அணியினர் தங்கள் தரப்பில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் முன்னதாக கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை அக்டோபர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 13-ம் தேதி நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தினகரன் தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விசாரணையை வரும் அக்டோபர் 16-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.