தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது!
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வழக்கறிஞர் ஜெயசுகின் என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து தனது கருத்தை பதிவுசெய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நீதிமன்றத்திடம் அரசும், தேர்தல் ஆணையமும் பலமான குட்டுக்களை வாங்கியும், இன்னும் திருந்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மலை போல் குவிந்திருக்கும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்க உடனே உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்த, அதிமுக அரசின் ஊதுகுழலான தமிழக தேர்தல் ஆணையம் மேலும் 3 மாதகால அவகாசம் கேட்டிருக்கிறது.
நீதிமன்றத்திடம் அரசும்,ஆணையமும் பலமான குட்டுக்களை வாங்கியும் இன்னும் திருந்தவில்லை.
மலைபோல் குவிந்திருக்கும் மக்கள் பிரச்னைகளை தீர்க்க உடனே தேர்தல் நடத்திட வேண்டும்! pic.twitter.com/URfdXDDCdh
— M.K.Stalin (@mkstalin) April 22, 2019
வழக்கறிஞர் ஜெயசுகின் தொடுத்த மனுவில், தேர்தல் நடத்துவது தொடர்பாக இதுவரை அறிவிப்பு வெளியிடப்படாததால், உள்ளாட்சி நிர்வாகம், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என குற்றம்சாட்டிப்பட்டிருந்தது. இந்த வழக்கில், ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது, தமிழக தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கப்பட்டது. இதனிடையே, மேலும், 3 மாதம் அவகாசம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.