தமிழகத்தில் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு ஸ்மார்ட் கார்டு முறையை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் ஸ்மார்ட் கார்டு விநியோகம் நடைபெற்று இன்று முதல் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு கட்டாயம் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ஆதார் எண்ணுடன் இணைக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. அதன்படி ரேஷன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டதால் 2.75 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் போலி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி மானிய விலையில் அதிக அளவிலான உணவு தானியங்கள் பெறப்பட்டு வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. உ.பி., மற்றும் மேற்குவங்கத்தில் 50 சதவீதம் போலி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக மத்திய உணவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலேயே அதிக அளவில் போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.