வங்கக்கடலில் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் விஜயன், வடமேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் விஜயன் தெரிவித்தார். மத்திய மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தார். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 18 செண்டி மீட்டர் மழையும், வால்பாறையில் 14 செண்டி மீட்டர் மழை பதிவானதாக கூறினார்.