சென்னை: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையோடு நடத்தப்படும்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் கடந்த 2 ஆண்டுகளாக பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள் இன்று காலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.
மாணவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லாத பட்சத்தில் தடையை மீறி நடத்துவது பற்றி தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்.