ஜெயலலிதா 69-வது பிறந்த நாள்: அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

Last Updated : Feb 24, 2017, 12:24 PM IST
ஜெயலலிதா 69-வது பிறந்த நாள்: அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. title=

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அவைத் தலைவரும், அமைச்சருமான செங்கோட்டையன் தலைமையில் ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து துணைப் பொதுச்செயலாளர் டி.டி. வி.தினகரன், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பண்ருட்டி ராமச்சந்திரன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவினார்கள்.

 

 

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தயார் செய்யப்பட்ட சிறப்பு மலரை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வெளியிட துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.

 

 

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தலைமைக்கழகத்தில் நடந்த மருத்துவ முகாமை துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தொடங்கி வைத்தார். 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா வில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் 69 லட்சம் மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதற்கு அடையாளமாக அவர் ஒரு மரக்கன்றை நட்டார்.அது மட்டுமின்றி சென்னையில்  வர்தா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பசுமையாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். அதற்கான மரம் நடும் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

 

 

Trending News