பிரதமர் மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார்

Updated: Jun 14, 2016, 12:29 PM IST
பிரதமர் மோடியை சந்திக்க ஜெயலலிதா டெல்லி புறப்பட்டு சென்றார்
Zee Media Bureau

தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாகவும், தொடர்ந்து 2-வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார். மாநிலத்தில் முதலமைச்சராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசுகிறார்.

அந்த வகையில் போயஸ் கார்டனில் இருந்து விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர்களும் இருந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் விமானம் மதியம் டெல்லி விமான நிலையத்தை  சென்றடைகிறது. அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அ.தி. மு.க. எம்.பி.க்கள் 50 பேரும் விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்ப்பார்கள்.

இதையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா விமான நிலையத்தில் இருந்து தமிழ்நாடு இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச உள்ளார். அவர்களிடம் தமிழக திட்டங்களுக்கு உதவும்படி முதலமைச்சர்  ஜெயலலிதா கோரிக்கை விடுப்பார்.

அதன் பிறகு முதல்வர் ஜெயலலிதா தில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் 4.45 மணியளவில் பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது தமிழக திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா பேசயுள்ளார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு தரக்கோரி கோரிக்கை வைப்பார் என்றும் காவிரி, மீனவர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த உள்ளார்.

பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகளுடனான சந்திப்பு முடிந்த பிறகு டெல்லியில் இருந்து இன்றிரவு 7 மணிக்கு முதலமைச்சர்  ஜெயலலிதா தனி விமானத்தில் சென்னை புறப்படுகிறார்.முதல்வருடன் தலைமைச் செயலர் மற்றும் முதல்வரின் தனிச்செயலர்களும் செல்கின்றனர்.