முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல்

முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: May 15, 2019, 06:52 PM IST
முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மனு தாக்கல்
File photo

மதுரை: நீதிமன்ற அறிவுறையை அடுத்து உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்.

கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.

இதைத்தொடர்ந்து கமலின் இந்த கருத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில அரசியல் தலைவர்கள் கண்டனமும், சில அரசியல் தலைவர்கள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு எதிராக அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக குற்றவியல் சட்ட 153ஏ பிரிவின் கீழும், பொது இடத்தில் பிரச்சனையை உருவாக்கியதாக 295ஏ பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்று கமல்ஹாசன் சார்பில் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை ஏற்ற நீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை விடுமுறை காலத்தில் நீதிமன்ற விசாரிக்க முடியாது. ஆனால் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தால் நாளையே வழக்கு விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்ற கிளை அறிவுறுத்தியது.

இதனையடுத்து தன் மீதான வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்