கரூர் கோயிலில் தரிசனம் செய்தபோது, 2 பெண்களின் கூந்தல் அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கரூர் தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி எதிரே ஊரணி காளியம்மன் கோயில் உள்ளது. வெள்ளி, செவ்வாய் மற்றும் விஷேச நாட்களில் இக்கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில்,
இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் சாமி கும்பிட வந்தார். அப்போது அந்த பெண் மட்டும் கோயிலுக்குள் சென்று கண்மூடி தரிசனம் செய்து கொண்டிருந்தார். கூட்டம் அதிக மாக இருந்ததால் கூந்தலை யாரோ இழுப்பதுபோல உணர்ந்த அந்த பெண், திடீரென திரும்பி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்து விட்டார். காரணம், ஒற்றைச்சடை போட்டி ருந்த அந்த பெண்ணின் கூந்தலை, மர்ம நபர், இனி சடையே போட முடியாத அளவுக்கு பல இடங்களில் கத்தரிக்கோலால் நறுக்கி விட்டு தப்பியோடி விட்டார். இதைப்பார்த்து அந்த பெண், அங்கேயே கதறி அழுதுள்ளார். மகள் அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்ற தந்தையும் அவருடன் சேர்ந்து அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது. அங்கிருந்த பொதுமக்கள் இருவருக்கும் ஆறுதல் கூறினர்.
பின்னர் அந்த இளம்பெண், கடைக்கு சென்று கத்தரிக்கோலை வாங்கி ஒட்டுமொத்தமாக கூந்தலை அறுத்து விட்டு தலையில் முக்காடு போட்டுக் கொண்டு வீட்டுக்கு சென்றார். அதேபோல் அன்று மாலை 7 மணியளவில் அதே கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த ஒரு இளம்பெண்ணின் கூந்தலையும் மர்ம நபர் அறுத்து சென்றார். கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியினர் பசுபதிபாளையம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.