Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 18.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் இன்று 100ஆவது பிறந்தநாளை கொண்டாடுவதையொட்டி அவருக்கும் பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அக்னிபாத் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்துவரும் போராட்டத்தின் எதிரொலியாக பிகாரில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மத்திய அமைச்சரை தடுத்தி நிறுத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள்
கோவை விமான நிலையத்தில் நுழைவு அனுமதி சீட்டு இல்லாததால் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு சில நிமிடங்களில் அதிகாரிகள் நுழைவு அனுமதி சீட்டுடன் வந்த நிலையில் எல்.முருகன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 6 புதிய அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமித்தது தமிழக அரசு
சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் வழக்குகளில் ஆஜராக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், எம்.கே.கபீர், என்.ஆர்.இளங்கோ, பி.வில்சன் ஆகியோரை நியமித்து பொதுத்துறை செயலாளர் ஜெகந்நாதன் பிறப்பித்துள்ள உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள்: நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
மதுரையை தொடர்ந்து தமிழகம் முழுதும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று மதுரை நடைபெற்ற விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
மதுரையில்பெண்கள் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக தொழிலணங்கு என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்வில் பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காவிரி விவகாரத்தில் திமுக அரசு எந்தளவிற்கும் சென்று வாதாடும்: முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுள் ஒன்று காவிரிப் பிரச்சினை. தமிழ்நாட்டுக்கான முழு உரிமை உள்ளதும் காவிரி நீர் ஆகும். எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்; வாதாடும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி தெரிவித்துள்ளார்.
தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு
வேடசந்தூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் பூக்கடை வைத்திருந்த லிவர் பாண்டி என்ற இளைஞரின் கடை அக்கரமிப்பு அகற்றலால் அகற்றப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பாண்டி புறக்காவல் நிலையத்தின் மீது கற்களை வீசி அடிக்கடி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் இன்று மதுபோதையில் பாண்டி வேடசந்தூர் அருகே அரசு பஸ்சை வழிமறித்து உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
"இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?": ஓபிஎஸ் தொண்டர்கள் முழக்கம்
அதிமுக அலுவலகத்தில் நிலவும் பரபரப்புக்கு மத்தியில் "இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" என ஓ பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தொண்டர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு தீர்மான குழுவின் கூட்டம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது பொதுக்குழு தீர்மான குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் நிறைவில் என்னென்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்பது குறித்து தகவல் வெளியாக வாய்ப்பிருக்கிறது. தற்போது இந்த ஒற்றை தலைமையின் கோரிக்கை எழுந்து இருக்கின்ற நிலையில் என்னென்ன மாதிரியான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல், பலர் காயம்
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட மோதலில் தொண்டர்கள் காயம் அடைந்தனர். மோதலில் காயமடைந்த தொண்டர்கள் ரத்தக்காயத்துடன் வெளியே வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இபிஎஸ் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் ஆலோசனை
சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, கேபி முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஆலோசனைக்கு பின் மதியம் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை: தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு
கோவையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அவிநாசி சாலையில் உள்ள பிஆர்எஸ் மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.
அதிமுக அலுவலகத்தில் தள்ளுமுள்ளு:
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதில் அதிமுக அலுவலகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மயிலாடுதுறை: பள்ளி வாகனங்கள் ஆய்வு
மயிலாடுதுறையில் 57 பள்ளிகளை சேர்ந்த 418 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஓட்டுனர்களுக்கு உடல் தகுதி மற்றும் கண் பரிசோதனையும் நடைபெற்றது. மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தலைமையில் அதிகாரிகள் கூட்டாய்வு செய்தனர்.
இந்த மாவட்ட மக்களுக்கு ரேஷனில் அரிசிக்கு பதில் கேழ்வரகு - தமிழ்நாடு அரசு உத்தரவு
நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் ரேஷன் கடையில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒற்றைத் தலைமை: புதிய மனு தாக்கல்
அதிமுக-வில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகம் புறப்பட்டார் ஓபிஎஸ்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்திற்கு புறப்பட்டார். இல்லத்தின் முன் ஆதரவாளர்கள் குவிந்திருந்த நிலையில், தற்போது தலைமை அலுவலகம் செல்கிறார் ஓபிஎஸ். ஆதரவு மாவட்ட செயலாளர்களை அதிமுக தலைமை அலுவலகம் செல்ல ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் அக்னிபத் போராட்டம்: இளைஞர்கள் கைது
அக்னிபத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி செய்து, பின் போலீஸ் தடுத்ததால் போர் நினைவுச் சின்னத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் இளைஞர்கள் கலைந்துசெல்லாமல், தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தங்கம் விலை நிலவரம்
இன்று காலை நிலவரப்படி, சென்னையில், ஒரு கிராம் 24 காரட் தங்கம் 5,164 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தூய தங்கம் 41,312 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 4,765 ஆகவும் ஒரு சவரன் தங்கம் ரூ. 38,120 ஆகவும் உள்ளது.
ஓ.பி.எஸ் இல்லத்தில் குவிந்து வரும் தொண்டர்கள்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை நிகழ்ந்து வரும் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜூன் 27 முதல் ராமேஸ்வரம் - குமரி விரைவு ரயில் இயக்கம்
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் - குமரி விரைவு ரயில் ஜூன் 27-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .
மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் சென்னையில் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
அக்னிபத்துக்கு எதிராக சென்னையில் போராட்டம்
அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை போர் நினைவுச் சின்னம் முன்பு இளைஞர்கள் திரண்டு போராட்டம். மேலும், தலைமைச் செயலகத்தை முற்றுகையிடவும் முயற்சி என தகவல்.
தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.எம். குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் 4வது நாளாக வருமானவரி சோதனை
தீம்பார்க், நட்சத்திர விடுதி நடத்தும் எம்.ஜி.எம் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார் காரணமாக சென்னை, நெல்லை, பெங்களூரு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4வது சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா: சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.