தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 74 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வளாகத்தில் கம்பி வலைகள், மரத்தால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 6 ஆம் தேதி, 9 ஆம் தேதி ஆகிய 2 நாட்கள் தேர்தல் நடத்தப்பட்டது. 6 ஆம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 77.43 சதவீத ஓட்டுகளும், 9 ஆம் தேதி நடந்த தேர்தலில் 78.47 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன.
வாக்கு எண்ணுவதை கண்காணிக்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு 20-ம் தேதி நடைபெற உள்ளது.