ஊரடங்கு குறித்த அறிவிப்பை காலதாமதம் செய்யாமல் முன்கூட்டியே அறிவியுங்கள் என தமிழக முதல்வருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!!
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து பிரதமர் மோடி இன்று காலை அனைத்து முதலமைச்சர்களுடனும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி கொண்டு உள்ளார். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு குறித்து உரிய முடிவை முன்கூட்டியே அறிவியுங்கள் என மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் CM பழனிச்சாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... "COVID-19" என்ற கொடிய தொற்றிலிருந்து இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும் - தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை - எளிய, நடுத்தரப் பிரிவினர் மீண்டும் தங்களது இயல்பான வாழ்க்கைக்குத் தேவைப்படும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடருவதற்கும், அரசு எடுக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு தி.மு.க சார்பில் எனது ஆதரவையும் ஒத்துழைப்பினையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று இந்திய அளவிலும், தமிழகத்திலும் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இன்னும் வரவில்லை. பாதிப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதும் துயரமளிக்கிறது. இந்நிலையில், மக்களின் பாதுகாப்பு மற்றும் நலன்கருதி, ஒரு சில கருத்துகளை தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலுக்கு உட்பட்டு விட்டதா என்பது குறித்து - தமிழக அரசும், மத்திய அரசும் தெரிவித்து வரும் தகவல்கள் முன்னுக்குப் பின் முரண்களாக உள்ளன. போதுமான விரைவுப் பரிசோதனைக் கருவிகள் இல்லாததால், பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு இன்னமும் செய்யப்படாத நிலையில், மக்கள் மிகுந்த அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்திருக்கிறார்கள்.
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப் பார்க்கும்போது, தமிழ்நாடு இரண்டாவது நிலையில் இருந்து மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடுமோ என்ற அய்யப்பாட்டையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அப்படி ஆகிவிடாமல் தடுத்தாக வேண்டும். மேலும், அதனை எதிர்கொள்ளத் தேவையான முன்னேற்பாட்டுடன் தமிழக அரசு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்".
ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும். எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 1 கோடியை அரசு எடுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனுக்காகத்தான் தொகுதி மேம்பாட்டு நிதியை எம்.எல்.ஏக்கள் பயன்படுத்துகிறார்கள். MLA-களின் தார்மீக உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கோல்டன் ப்ரீயட்தான். அதை சரியாக பயன்படுத்தியாக வேண்டும். தனித்திருத்தல் மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்ற அனைத்தையும் அரசுதான் ஏற்று செய்ய வேண்டும். கொரோனா விவகாரத்தில் அரசுக்கு ஆலோசனை தர, ஒத்துழைக்க, உதவி வழங்க திமுக தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.