நீட் தேர்வுக்கு ‘ஹால் டிக்கெட்’ இணையதளத்தில் வெளியீடு தேர்வு தேதி மாறியதால் குழப்பம் ஏற்ப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ www.nta.ac.in, www.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தேசிய தேர்வு முகமை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது.
ஹால் டிக்கெட் வெளியானதும், தேர்வர்கள் ஆர்வமுடன் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு பதிவிறக்கம் செய்த ஹால் டிக்கெட்டுகளில் தேர்வு தேதி மாறி இருந்ததாகவும், பின்னர், இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு தெரிவிக்கப்பட்டு, ஹால் டிக்கெட்டுகளில் அது சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அடுத்த மாதம் 5ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு தேர்வு நிறைவு பெறுகிறது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உள்பட 11 மொழிகளில் இந்த தேர்வு நடைபெறுகிறது.