சமூகநீதிக்கு எதிரான கிரீமிலேயர் முறையை ரத்து செய்ய வேண்டும் -PMK!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது. 

Last Updated : Mar 1, 2020, 12:41 PM IST
சமூகநீதிக்கு எதிரான கிரீமிலேயர் முறையை ரத்து செய்ய வேண்டும் -PMK! title=

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைப்பெற்றது. 

சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என் பேலஸ் (GPN Palace)  திருமண அரங்கத்தில் நடைப்பெற்ற இந்த தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விவரம்.

தீர்மானம் 1 : காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் பெற்றுத்தந்த மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்குப் பாராட்டு

காவிரி பாசன மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், சோலைவனமாக திகழும் அந்த மாவட்டங்கள், பாலைவனமாக மாறும் ஆபத்து நிலவியது. இந்த ஆபத்திலிருந்து காவிரிப் பாசன மாவட்டங்களை மீட்க வேண்டுமானால், அவற்றை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற யோசனையை முதன் முதலில் தெரிவித்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அதுமட்டுமின்றி, 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் இதை முக்கிய வாக்குறுதியாகவும் பா.ம.க. இடம்பெயச் செய்தது.

அதுமட்டுமின்றி, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களின் வழிகாட்டுதலில், காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி,  ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை மருத்துவர் அன்புமணி இராமதாசு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததற்காக பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த 10 கோரிக்கைகளில், முதல் கோரிக்கையாக காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் இடம்பெற்றிருந்தது. இக்கோரிக்கையை நிறைவேற்றும் படி, மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இருமுறை சந்தித்து வலியுறுத்தினார்கள். தமிழக முதலமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் இருமுறை கடிதம் எழுதினார். அவற்றின் பயனாக, காவிரி பாசன மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதுடன், அதற்கான தனிச்சட்டமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

காவிரிப் பாசன உழவர்களின் பெரும் கனவாக இருந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல கோரிக்கையை தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிறைவேற்றச் செய்த மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் பாராட்டுக்களையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 : தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

இந்தியாவில் இடஒதுக்கீட்டுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டின் மீது கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் நடைமுறையில் உள்ள எந்த இடஒதுக்கீடும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டவை அல்ல என்பது இடஒதுக்கீட்டை பலவீனப் படுத்தியுள்ளது. இதைப்பயன்படுத்திக் கொண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிரான சக்திகள் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளன. தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், 69% இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு செல்லும் என்று 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அடுத்த ஓராண்டிற்குள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை உறுதி செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால், அதன் பின் 10 ஆண்டுகள் ஆகியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், அதைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இறுதி விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படா விட்டால், இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. இதைக் களைய, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் இடஒதுக்கீட்டை நிர்ணயிப்பது மட்டும்தான் ஒரே தீர்வாகும்.

இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டை அதிகரித்துக்கொள்ளவும் வசதியாக, கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்கிறது. மராட்டியம், ஒதிஷா, பீகார் ஆகிய மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடுத்துவதற்கான தீர்மானங்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேசிய அளவில் 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு மாநிலங்களில் எழுந்திருக்கிறது. அக்கோரிக்கை மிகவும் நியாயமானது என்பது மட்டுமின்றி, தவிர்க்க முடியாததும் ஆகும். பாட்டாளி மக்கள் கட்சியும் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களும் நேரில் சந்தித்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்.

சமூக நீதியைப் பாதுகாப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் அவசியம் ஆகும். இதைக் கருத்தில் கொண்டு, 2021ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தேவைப்பட்டால், மாநில அளவில் தமிழக அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது.

தீர்மானம் 3 : கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலியம் முதலீட்டு மண்டலம் திட்டத்தை கைவிடச் செய்த மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்கு பாராட்டுகள்

கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் உள்ள 57,345 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் 2008 ஆம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெற்று கடந்த 2017ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இத்திட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மருத்துவர் அய்யா அவர்களின் அறிவுரைப்படி,  பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருந்த கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி கொடுத்த அழுத்தம் காரணமாகவும், காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதாலும், பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் திட்டத்தை அரசு கைவிட்டது.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டிருந்தால், ஏற்கெனவே கருப்பு மாவட்டம் என்று அழைக்கப்படும் கடலூர் மாவட்டமும், நாகப்பட்டினம் மாவட்டமும் பேரழிவைச் சந்தித்திருக்கும். அந்த  திட்டத்தை ரத்து செய்யவைத்து, அதன் மூலம் கடலூர், நாகை மாவட்டங்களைக் காப்பாற்றிய மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரை இப்பொதுக்குழு உளமாற பாராட்டுகிறது.

தீர்மானம் 4 : தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி.) எதிராக தீர்மானம் இயற்றுக!

தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டு, அதில் இடம்பெறாத மக்கள் குடியுரிமையற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்; தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பதற்கு வசதியாக தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கான (என்.பி.ஆர்.) வினாக்கள் பட்டியலில் சில தேவையற்ற விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று வெளியாகி வரும் செய்திகள் அனைத்துத் தரப்பு மக்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன. இதைப் போக்கி மக்களிடையே நம்பிக்கையை உருவாக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.

தமிழ்நாட்டிற்கு தேசிய குடிமக்கள் பதிவேடு தேவையற்றது என்று கடந்த 31.12.2019 அன்று நடந்த பா.ம.க. புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ம.க.வின் இந்த கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது என மாநில அரசு அறிவித்துள்ளது. எனினும், மக்கள்தொகை பதிவேட்டிற்கான வினாக்கள் பட்டியலில் பெற்றோரின் பிறப்பிடம், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகியவை குறித்த 6 வினாக்கள் மக்களிடையே அச்சத்தை விதைத்துள்ளன. இந்த 6 வினாக்களையும் நீக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ள போதிலும், மக்களின் அச்சம் விலகவில்லை. மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், தமிழ்நாட்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படாது; தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மக்களை அச்சுறுத்தும் வகையிலான வினாக்கள் கேட்கப்படாது என்று உறுதி அளிக்கும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என பா.ம.க. கோருகிறது.

தீர்மானம் 5 : 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வைத்த  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு பாராட்டுகளும், நன்றிகளும்

தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்து கொண்டிருந்த போதே அதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்தது. பொதுத்தேர்வு திட்டத்தை தமிழக அரசு அறிவித்த பிறகும் பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. உலகம் தெரியாத தளிர்களுக்கு 5&ஆம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்துவது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது என்பதால் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கடந்த ஜனவரி 28&ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்தார்கள். எனினும், பொதுத்தேர்வு முறையை ரத்து செய்வது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உறுதியளித்ததையடுத்து, அதை ஏற்று பா.ம.க. போராட்டம் கைவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் கைவிடப்படுவதாக பிப்ரவரி  4&ஆம் தேதி தமிழக அரசு அறிவித்தது. இதற்கு காரணமாக இருந்த மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோருக்கு  இப்பொதுக்குழு நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது. பா.ம.க.வின் கோரிக்கையை ஏற்று 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகளை ரத்து செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 6 : சமூகநீதிக்கு எதிரான கிரீமிலேயர் முறையை ரத்து செய்ய வேண்டும்

மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட   ஒதுக்கீட்டை பெறுவதற்கு கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக 1993ஆம் ஆண்டு  மத்திய அரசு வெளியிட்ட அலுவலகக் குறிப்பாணையில், கிரிமீலேயர் வரம்பை கணக்கிடும் போது, விவசாயம் மற்றும் ஊதியம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும் தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனால், கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்திய மத்திய அரசு அதிகாரிகள், அதற்கு தீர்வுகாண்பதாகக் கூறிக்கொண்டு, கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. இந்த பரிந்துரையின்படி, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.67,000 இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு விடும். இதைவிட மோசமான சமூக அநீதி எதுவும் இருக்க முடியாது. இது ஓ.பி.சி. இடஒதுக்கீட்டை மறைமுகமாக ஒழிப்பதற்கு செய்யப்படும் ஏற்பாடு ஆகும்.

இந்தச் சதியை முறியடித்து, சமூகநீதியை நிலை நிறுத்த, ஊதியத்தை கணக்கில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது; கிரிமீலேயர் முறையை முழுமையாக நீக்க வேண்டும் என்று மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 7 : மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரிப்போருக்கும், எதிர்ப்போருக்கும் இடையே தில்லியில் நடைபெற்ற மோதலின் போது, ஏற்பட்ட வன்முறையில் சுமார் 42 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இப்பொதுக்குழு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. காயமடைந்தவர்கள் நலமடைய விழைகிறது.

தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பான மோதல்கள் நாடு முழுவதும் பதற்றத்தையும், பகைமை உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. இதைப்போக்கி, அமைதியை நிலைநிறுத்தவும், மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சகோதரத்துவத்தை வளர்க்கவும் தேவையான நல்லெண்ண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை தேர்தல் சிறப்பு பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 8 : காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்

கர்நாடகாவுடனான நதிநீர்ப் பிரச்சினை காரணமாகவும், காலநிலை மாற்றம் காரணமாக சரியான நேரத்தில் பருவமழைப் பெய்யாததாலும், மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போயிருக்கிறது. சம்பா சாகுபடியும் 4 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இத்தகைய சூழலில், கோதாவரி ஆற்றின் உபரிநீரை காவிரியில் திருப்பிவிடுவதன் மூலம், காவிரிப் பாசன மாவட்டங்களை வளம் கொழிக்கும் பூமியாக மாற்ற முடியும். இதற்காக கோதாவரி - காவிரி ஆறுகள் இணைப்புத் திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சகம் தயாரித்திருக்கிறது.

இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், நிதிஒதுக்கீடும் 2020 - 21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுகுறித்த எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. இது தொடர்பாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா, கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையின் வரைவு தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் பெற்று, விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டவுடன் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டு உழவர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

அதன்பின் நேற்று முன்நாள் காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (என்.ஐ.டி) பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு விட்ட நிலையில் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டப் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும். அது குறித்த அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பா.ம.க. கோருகிறது.

தீர்மானம் 9 : பா.ம.க.வின் கோரிக்கைகளை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி

“உழவர்கள் தான் எனது தாய், தந்தையருக்கு அடுத்தபடியாக நான் வணங்கும் கடவுள்கள்” என்று உள்ளூர் பொதுக்கூட்டங்களில் தொடங்கி, நாடாளுமன்றம் வரை பா-.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூறி வருகிறார். தமிழகத்தில் உழவர் நலன் காப்பதற்காக போராடும் கட்சிகளில் முதன்மையான கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி திகழ்கிறது. 2019 மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக பா.ம.க. முன்வைத்த 10 கோரிக்கைகளில் பெரும்பாலானவை உழவர்களின் நலன் காப்பவை ஆகும். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்று அரசுக்கு மருத்துவர் அய்யா, மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.

அதை ஏற்று, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, நாகை, கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத் திட்டத்தையும் முதலமைச்சர் பழனிசாமி ரத்து செய்தார். இதற்காக, அவருக்கு பா.ம.க. சிறப்பு பொதுக்குழு நன்றிகளை உரித்தாக்குகிறது.

தீர்மானம் 10 : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை சந்திக்க பா.ம.க. தயார்

தமிழ்நாட்டில் 3 ஆண்டுகள் தாமதமாக கடந்த திசம்பர் மாதம் நடைபெற்ற 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அமோக வெற்றி பெற்றது. ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 430 இடங்களில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, 224 இடங்களில் வெற்றிபெற்றது. பா.ம.க.வின் வெற்றி விழுக்காடு 52.09% ஆகும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் அதிக வெற்றி விழுக்காடு பெற்ற கட்சி பா.ம.க. ஆகும். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 36 இடங்களில் போட்டியிட்ட பா.ம.க. 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழகத்தின் 3வது பெரிய கட்சி பா.ம.க. என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்த வெற்றியை தேடித்தந்த பொதுமக்களுக்கு பா.ம.க. பொதுக்குழு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.

நீதிமன்ற வழக்குகள் காரணமாக, இதுவரை தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களின் கிராமப்புற உள்ளாட்சிகளுக்கும், தமிழ்நாடு முழுமைக்காக நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்தேர்தலை அதிமுகவுடன் இணைந்து எதிர்கொள்ள பா.ம.க. தயாராக உள்ளது, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிகளைக் குவிக்க உழைக்கும்படி பா.ம.க.வினரை இப்பொதுக்குழு கோருகிறது.

 
தீர்மானம் 11 : போர்க்குற்றம் - இலங்கை தண்டிக்கப்படுவதை இந்தியா உறுதி செய்யவேண்டும்

2009ஆம் ஆண்டு நடந்த ஈழப்போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொடூரமாக படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்கள், போர்ப்படை தளபதிகள் ஆகியோர் மீதான ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் போர்க்குற்ற விசாரணையிலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கையில் புதிதாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயா ராஜபக்சே தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்திலும் இலங்கை இதைத் தெரிவித்துள்ளது. எனினும், இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை கைவிடப்படாது என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.

ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த போர்க்குற்றச்சாட்டு மீதான விசாரணை நியாயமாக நடந்தால் இப்போதைய இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, இலங்கைப் பிரதமர் மகிந்தா ராஜபக்சே மற்றும் போர்ப்படை தளபதிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே போர்க்குற்ற விசாரணையிலிருந்து விலக இலங்கை துடிக்கிறது. ஈழத் தமிழர்களை கொடூரமாக படுகொலை செய்த இலங்கை ஆட்சியாளர்கள், அதற்கான தண்டனையிலிருந்து தப்புவதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு நீதிபெற்றுத்தரும் பொறுப்பும், கடமையும் இந்தியாவுக்கு உள்ளது. எனவே, இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணையை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை பேரவையில், இந்தியா கொண்டு வந்து, நட்பு நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்ற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் 12 : ஏழு தமிழர் விடுதலையில் குழப்பத்தைப் போக்க ஆளுநர் உடனடியாக முடிவை அறிவிக்க வேண்டும்.

இராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை கடந்த 09.09.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றியது. அதன் பின்னர் இன்று வரை 539 நாட்களாகிவிட்ட நிலையில் இன்று வரை அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் தேவையின்றி தலையிட்டு, 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவை தீர்மானம் செல்லாது; அதற்கு பூஜ்ஜியம் மதிப்புதான் உண்டு என்று கூறியிருப்பது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. 7 தமிழர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கின் விசாரணையில், இது தொடர்பான ஆளுநரின் நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி, கடந்த 12.02.2020 அன்று நீதிபதிகள் ஆணையிட்டனர். அதன் பின், இரு வாரங்களுக்கு மேலாகியும், ஆளுநரின் முடிவு இன்னும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படாதது குழப்பங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தக் குழப்பங்களுக்கு முடிவுகட்டும் வகையில்,

7 தமிழர் விடுதலை குறித்த தமது முடிவை தமிழக ஆளுநர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 13 : தமிழ்நாட்டில் புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது; முழு மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் ஏற்கனவே மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படுவதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கை எனும் நிலையில், மதுக்கடைகளை மூடுவதற்கு பதிலாக புதிய மதுக்கடைகளை திறப்பது நியாயமற்றது. ஆகவே, புதிய மதுக்கடைகள் திறப்பு கைவிடப்பட வேண்டும்.

தமிழகத்தில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்படும் என்று தமிழக அரசு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும்; விரைவில் முழு மதுவிலக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசை பா.ம.க. கோருகிறது.

தீர்மானம் 14 : நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பணிகளை விரைவு படுத்துக!

உண்மையில் உலகமே தற்போது திருப்பு முனையில் நிற்கிறது. ஒரு பக்கம், உலக மக்கள் அனைவரும் முழுமையான வளர்ச்சியை அடைய வேண்டும் என்ற நோக்கம் கொண்ட ‘‘நீடித்திருக்கும் வளர்ச்சி குறிக்கோள்கள் 2030’’ இலக்குகளை அடுத்த பத்தாண்டுகளில் அடைய வேண்டும் என்ற கட்டாயம். மறுபக்கம், புவிவெப்படைவதால் பூவுலகம் அழியாமல் காப்பாற்றுவதற்காக ‘‘காலநிலை அவசர நிலை செயல்திட்டத்தை’’ அடுத்த பத்தாண்டுகளில் செயல்படுத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாயம். இந்த இரண்டு நெருக்கடிகளாலும் மிக அதிகமாக பாதிக்கப்படும் பகுதியாக தமிழ்நாடு இருக்கிறது. 

மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் உலக நாடுகள் வரிசையில் 20 ஆவது இடத்தில் தமிழ்நாடு இருக்கும். இந்நிலையில் வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதிலும் காலநிலை அவசரநிலையை சமாளிப்பதிலும் தமிழ்நாடு முன்னிலையில் இருக்க வேண்டும் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் விருப்பம் ஆகும். அந்தவகையில் நீடித்திருக்கும் வளர்ச்சி குறிக்கோள்கள் 2030 (Sustainable Development Goals 2030) மற்றும் பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (Paris Climate Agreement) ஆகியவற்றை விரைவாக செயல்படுத்தும்படி தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

Trending News