திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், தலித், அரசியல் மற்றும் சாதி அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறிவருபவர். பலமுறை இவரது பேச்சு சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. தற்போது ராஜராஜசோழன் குறித்து பேசிய பேச்சு தமிழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித் கூறியது, "மன்னர் ராஜராஜ சோழன் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடம் இருந்த நிலத்தை அபகரித்தார். அவரது ஆட்சியிலிருந்துதான் ஜாதி கட்டமைக்கப்பட்டது. தேவதாசி முறை அவர்கள் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. ராஜராஜ சோழன் ஆட்சிதான் இருப்பதிலேயே இருண்ட ஆட்சி" என்று பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியது. அவரின் பேசுக்கு எதிராகவும், ஆதராகவும் சமூக வலைதளத்தில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்து அமைப்பினர் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், ராஜராஜ சோழனை விமர்சித்த இயக்குநர் பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் போலீசார் பா.ரஞ்சித் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.